ஏனப்பா துப்பினாய் முத்துக்குமாரா?

  அங்க ஒருத்தன் காறித்துப்பினதில என்னிலயும் ஒரு துளி பட்டுட்டுது. ஒரு நெளியுற சாக்கடைப்புழு மாதிரி உணருறன். ஏனப்பா துப்பினாய் முத்துக்குமாரா?

  எனக்குத்தான் பின்னால வெள்ளைவானும் முன்னால புதைகுழியுமா வாயைத்திறக்கேலாமக்கிடக்குது. உனக்கு என்ன பிரச்சனை?

  ம்ம்... கத்தும்மட்டும் கத்திப்பாத்தாய்.. யாரும் கேட்டமாதிரியே தெரியேல்ல.... அதுதான் காறித்துப்பிவிட்டாய்... ஆனா முதுகு வலிக்கிதெண்டு போய் படுத்தவை மற்ற பக்கம் திரும்பிப்படுத்திட்டீனமாம். துப்பலை துடைக்கத்தான் அவை நிறைய துண்டு வைச்சிருக்கினமல்லோ! இதைவைச்சு என்னசெய்யலாம் எப்பிடி உழைக்கலாம் எண்டு விழுந்த துப்பலை நக்கிப்பாத்த படியே அவை யோசிப்பீனம்.

  அவையத்திட்டவோ பேசவோ நாங்க யார்?
  கைகாலெல்லாம் முறிச்சு வெட்டித்தள்ளினப்பிறகும் நாக்கெல்லாம் வறள ஊர்ந்து வந்து உங்கட காலப்பிடிச்சு உதவி கேட்டம்...
  இல்லையெண்டு சொன்னாலும் பறுவாயில்லை... இழுத்தடிச்சு எங்களை வித்துப்போட்டியளே? கண்ணுக்குமுன்னால மறுபடியும் வெட்டுறதுக்கு இழுத்துக்கொண்டு போறான். அதுதான் தாங்க முடியாம ஒருத்தன் உங்க ஒருத்தன் தீக்குளிச்சிட்டான்.
  அதுக்காக இங்க யாரும் குளிக்காம இருக்கிறதெண்டு சொல்லாதீங்க...
  வன்னியவிட்டு வெளில வந்தவன் குளிக்கிறான்... கொத்தா... குலையா... குடும்பம் குடும்பமா....

  வீட்ட வந்த பக்கத்துவீட்டுக்காரன கடிச்சுப்போட்டுதெண்டு,
  நீங்கள் ஆசையா வளர்த்த...
  உங்களை நம்பி இருந்த நாயை
  அடிச்சுக்கொல்லச்சொல்லுறீங்கள்....
  குட்டியக்கதறகதறக் கல்லாலடிச்சுக்கொண்டவனத்தான் அந்த நாய் கடிச்சதெண்டாலும் ஒத்துக்கொள்ளுறியளில்லை.
  கொல்லுங்கோ... அது ஊமையா அழுகுது...அதுக்கெண்டு உலகத்தில யாருமில்ல... அது செத்தப்பிறகு.... பக்கத்துவீட்டுக்காரன் தாற பணியாரத்தை வாங்கிச்சாப்பிடுங்கோ....

  எந்த இயக்கமும் எப்பிடியோ போகட்டும்... எனக்கு அதைப்பற்றிக்கவலையில்ல....
  அவையள் பயங்கரவாதியளா பாசிசவாதியளா.. எனக்கு யோசிக்க நேரமில்ல....
  மூன்டரை லட்சம் சனம்....
  என்ட தமிழ்ச்சனம்.....
  அப்பாவிச்சனம்.....
  தங்கட சொந்தபூமியில வாழவேண்டுமெண்ட ஆசையில அங்க இருந்த சட்டதிட்டங்களால ஆயுதப்பயிற்சி எடுத்த சனம்....
  இப்ப என்ன செய்யுறதெண்டு தெரியாம அய்யோ எண்ட அலறுது...
  வெளியில வந்தாலும் சாவு... உள்ள இருந்தாலும் சாவு...
  அது எப்பவெண்டு தெரியாமல் தினமும் அலறி அலறிச்சாகுதுகள்...
  பேசாம ஒரு கரு‌ணக்கொலை மாதிரி ஒரு அணுகுண்டைப்போட்டு ஒரே கணத்தில சாக்கொல்லி விடுங்களன்....
  கடைசி அதைச்செய்தாலாவது எங்கட உயிரோட கலந்துவிட்ட முத்துக்குமாரிண்ட ஆத்மா சாந்தியடையுதோ பாப்பம்.

  முத்துக்குமாரனே.....
  வீரமாய் மரணித்தவனே...
  உன் தியாகத்தீப்பொறியில் தமிழின உணர்‌வெல்லாம் பற்றி...
  வன்னித்தமிழர் வாழ்வுக்கோர் வெளிச்சம் கிட்டினால்...
  அன்று அவர் கொஞ்சிமகிழ உன் வாரிசொன்றைத்தராது சென்றுவிட்டாயே.........!
  தன்னல தமிழக அரசியலால் அப்படி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையிலா?


  பி.கு: நானெந்த இயக்கத்துக்கும் சார்பானவனல்ல... ஆகவே வழமைபோல இதைத்தயவு செய்து புலித்தோல் போர்த்திப் பார்க்காதீர்கள். துப்பலைத்துடைக்க முயற்சி செய்தேன்.. அவளவுதான்...


  12 Responses

  1. சிந்தனைகளுக்கு வரம்பிடும்போது சுயம் தொலைந்து விகிறது...
   ஆகவே வழமையான சுவை என் ஆக்கத்தில் இல்லாவிட்டாலும் கருத்துப்புரியுமென்று நினைக்கிறேன்.
   சிறிது காலத்திற்கு என் ஏனைய பதிவுகளை நிறுத்திவைக்வும் சிந்தித்துள்ளேன்...
   மனது மிகவும் பாரமாக இருக்கிறது...... :(

  2. //மனது மிகவும் பாரமாக இருக்கிறது...... :(//

   ஓமண்ண...செய்திய வாசிச்சதிலிருந்து மனசுக்குள்ள ஒரே உளைச்சல்..இவ்வளவு desperate ஆகிவிட்டது எம் தமிழ் இனம் என்று நினைக்கும்போது வலிக்கிறது..

  3. //முத்துக்குமாரனே.....
   வீரமாய் மரணித்தவனே...
   உன் தியாகத்தீப்பொறியில் தமிழின உணர்‌வெல்லாம் பற்றி...
   வன்னித்தமிழர் வாழ்வுக்கோர் வெளிச்சம் கிட்டினால்...
   அன்று அவர் கொஞ்சிமகிழ உன் வாரிசொன்றைத்தராது சென்றுவிட்டாயே.........!
   தன்னல தமிழக அரசியலால் அப்படி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையிலா?//

   :((

  4. உன் தியாகத்துக்கு தலை வணங்குகின்றேன்.

  5. அனுராதபுரக்காடுகளில வன்னியவிட்டு வெளில வந்தவன் குளிக்கிறான்... கொத்தா... குலையா... குடும்பம் குடும்பமா....

   வீட்ட வந்த பக்கத்துவீட்டுக்காரன கடிச்சுப்போட்டுதெண்டு,
   நீங்கள் ஆசையா வளர்த்த...
   உங்களை நம்பி இருந்த நாயை
   அடிச்சுக்கொல்லச்சொல்லுறீங்கள்....
   குட்டியக்கதறகதறக் கல்லாலடிச்சுக்கொண்டவனத்தான் அந்த நாய் கடிச்சதெண்டாலும் ஒத்துக்கொள்ளுறியளில்லை//

   நல்லாத்தான் அடிக்காமல் அடிக்கிறீங்கள்...

  6. தியாகங்கள் ஒருபோதும் வீணாக போவதில்லை!!!

  7. @ தியாகி , சிபி, கமல், ஆதிரை...
   வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
   மீண்டும் ஒரு மகிழ்ச்சியான பதிவில் சந்திப்போம்...

  8. சோகத்தில் பங்கெடுத்து கொள்கிறேன்.

   :(

  9. உங்களின் வலி நானும் உணர்கிறேன்.

   :-(

  10. கார்த்தி , ஆ! இதழ்கள் ,நான் ஆதவன்
   உங்கள் வருகைக்கும் கவலை தெரிவிப்பிற்கும் நன்றிகள்....

  11. வீரமாய் மரித்துச் சென்றாய் முத்துக்குமரஅண்ணே
   நாங்கள் இங்கு மொளனமாய் மரணிக்கின்றோம்
   கண்ணீர் துளிகளை தவிர வேறெதயும் சமர்ப்பிக்க‌
   முடியவில்லை எம்மால் எனெனில்; சாவை மட்டுமே எதிர்கால
   சொத்தாக கொண்டு வாழும் ஈழ தமிழர்கள் நாங்கள்!


   ஆனால் ஒன்று மட்டும் நிட்சயம்
   வீர தமிழர் வெற்றி வாரலாற்றில்
   என்றாவது ஒரு நாள் உன் பெயரும்
   பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

  12. //உங்களை நம்பி இருந்த நாயை
   அடிச்சுக்கொல்லச்சொல்லுறீங்கள்....
   குட்டியக் கதறகதறக் கல்லாலடிச்சுக்கொண்டவனத்தான் அந்த நாய் கடிச்சதெண்டாலும் ஒத்துக்கொள்ளுறியளில்லை.//

   ம்ம்... உண்மை...