போர்த்தேங்காய்


    ஏதாவது விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்ற வெறி எனக்கு சிறு பராயத்திலிருந்து கூடவே வந்த ஒன்று. அழுது புரண்டு அப்பாவை மிரட்டி ஆயிரம் ருபாய்க்கு சப்பாத்து (97ம் ஆண்டில் அதெல்லாம் பெரிய காசு) டீசேட்டு எல்லாம் புதுசா வாங்கி கிரிக்கட் பிறக்டிசுக்கு போய் , அங்கு, முதல் நாள் லெதர்(கொக்) போலை ஏதோ தும்பி பிடிக்கிற ரேஞ்சில் பிடிக்கப்போய் கைவிரல் எல்லாம் சுளுக்கி மூன்று நாள் அப்பாவின் நக்கலையும் கூடவே வலியையும் பொறுத்தபின் கிரிக்கட் பக்கமே பலகாலம் தலைவைத்தே படுத்ததில்லை. சரி வேண்டாம் ஆபத்தில்லாத விளையாட்டு, ட்ரக் இவண்ட் (track event) ஏதாவது செய்யலாம் என்று 2001 இல் எனது இல்ல ஆசிரியரை அணுகியபோது. ஏன்னுடைய high qualified sport activity profile ஜ அவதானித்த அவர் எனக்கு தந்தது பப்பா மரம் ஏறுதல். அதாவது புளுகு புளுகென்று புளுகி என்னை 5000m (15 ரவுண்டுகள்) ஓட்டப்பந்தயம் ஓட பெயர் கொடுக்க வைத்துவிட்டார். சரி என்ன 15 ரவுண்டுதானே ஓடிவிட்டால் போயிற்று என்று பின்னேரம் ப்ராக்டிசுக்கு வந்தால்…. கூட வந்தவர்கள் 5வது ரவுண்டு ஓடிக்கொண்டிருக்கும்போது இங்கே முதலாவது ரவுண்டுக்கு இன்னும் முக்காவாசி ஓடவேண்டிய நிலையில் கால் கெஞ்சியது. கண்ணை இருட்டியது. வுயிற்றினுள் ஏதோ கொளுவியது. அவனவன் பட்டினி போட்டு ஓடிக்கொண்டிருக்கும்போது இங்கே என் வயிற்றினுள் 3 கொழும்புத்துறை கொளுத்த நண்டுகள் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தன. செத்தேண்டா சாமி என ஆசிரியரிடம் ஓடினால் நம்பியார் ரேஞ்சில் புளியங்கோம்பு ரிப்ளை கிடைத்தது. என்னை ஓட வைத்தது அவர்கள் செய்த உலகமகா பிழை என்பதை விளையாட்டுதினத்தன்று உறைத்த போது அவர்களால் எதுவுமே செய்யமுடியவில்லை. ஒரு ட்ரக்(track) இவண்டினை தவழ்ந்து உருண்டெல்லாம் முடித்த கதை எனது கல்லூரியில் மட்டும்தான் ஒரு வரலாற்றுச்சம்பவமாக பதிவாகியிருக்கும்.

    அத்துடன் எனது திருவிளையாட்டுக்களை முடித்துவிட்டு கம்பஸ் புகுந்து சும்மா இருந்தபோதுதான் எனக்கு இன்னொரு விளையாட்டின் அறிமுகம் கிடைத்தது. அதுதான் wrestling. பெண்டுகள் சித்தி சீரியல் பாரப்பது எல்லாம் என்ன மூலைக்கு. நம்ம ஆள் 232 வது cd இல cenaவுக்கும் batistaவுக்கும் நடந்த சண்டையில கடைசிவரிசையில நிண்டு கைதட்டின மொட்டைக்கறுபன் என்ன கலர் பெல்ட்டு கட்டியுருந்தவனெண்டு சொல்லுவான். நம்மட கம்பஸில அரைவாசிக்கு wwe பனிதான். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? படிப்பு நேரம் போக மிதிநேரம் எல்லாம் காளி கோழி திண்ட கதையும் சீனா கானா பாடின கதையும்தான். இந்த நேரம்தான் மறுபடியும் எனக்கு விளையாட்டு ஆசை வந்தது. ஒருவருக்கம் சொல்லாமல் கம்பஸ் wrestling coaching இல் இணைந்து கொண்டேன். ஏன்னை 80-90kg குறூப்பில் இணைத்தார்கள். மாஸ்டர் ஒரு இராணுவ அதிகாரி. இராணுவச்சட்டம் தான் coaching இலும். 80-90குறூப்பில் யாரும் இல்லாததால் நான் 2005 செப்டம்பர் பல்கலை ரீதியான போட்டிக்கு செல்லவேண்டுமெனவும் கடுமையான பயிற்சி செய்யவேண்டுமெனவும் மாஸ்டர் உத்தரவிட்டார். சீனியரில் ஐவர் இருந்தார்கள். எல்லாம் 100-110,110-120 குழுவில்தான். 5,6 சுப்பர் ஜுனியர்களும் 60-70,70-80 குழவில் இணைந்திருந்தார்கள். எனவே எப்படியாவது எனது பிரிவில் பங்கேற்று கலர்ஸ் வாங்கிவிட வேண்டுமென்ற அவாவில் கடுமையான பயிற்சி செய்தேன். மாஸ்டர பூட்டு முறைகள் சொல்லி தருவதிலும் staminaவை தக்கவைப்பதிலும் கடும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்.

    3rd year 1st semi examக்கு 2 கிழமைகளே இருந்த நிலையில் பயிற்சியின் போது மாணவர்கள் தமக்கிடையே மோத உத்தரவிடப்பட்டது.
    ஏனக்கு சோடியில்லை. ஆகவே 70-80 குறூப்பிலிருந்து ஒருவன் என்னுடன் மோத அனுமதிக்கபட்டான். அவனும் என்னை ஏதோ சில்லறைப்பயல் போல லுக்கு விட்டவாறு மோத தயாரானான். ஆவனை ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை எனக்கு. தான் ஸ்கூலில் wrestling சாம்பியனாம் என்று சொல்லி மாஸ்டரை காக்கா பிடிப்பதும் எம் மீது பிழை பிடிப்பதுமாக அவன் செய்த அட்டகாசங்கள் அவன் மண்டையை பிளந்தாலென்ன என்று கறுவ வைத்தன. ஏன்றாலும் அந்த ஸ்பொஞ்சு மேடையில் ஏறியதும் எனது விளையாட்டு தொடர்பான sub conscious mind முழித்துகொண்டது.”இன்னிக்கு ஒனக்கு சங்குடா மவனே! ஆவன் ஸ்கூலு சாம்பியனாக்கும்… அவன் ஒன் மென்னிய திருகப்போறான்… எல்லாரும் ஒன்னய பாத்து சிரிக்கப் போறாங்க” என்று சிரித்தது. வெளியில் பயத்தை காட்டிக் கொள்ளாமல் ,மாஸட்ர் விசிலடித்ததும் அவன் இடுப்பைக் குறிவைத்துப் பாய்ந்தேன். அவன் லாவகமாக விலகிக்கொண்டாலும் அவன் கை மாட்டிக்கொண்டது. இறுமாப்பு அவன் கண்களை மறைத்திருந்த போது அவன் கையை பிடித்துவிட்ட நான் அம்பிட்ட வரை லாபம் என அவனை பிடித்து குப்புறத்தள்ளி அவன் மீது ஏறி இருந்து கையை திருகினேன். சரியாக மாட்டிக்கொண்டான். ஆணவம் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்க வலியில் துடித்தான். ஏனக்கு கோபமும் பதட்டமும் அதிகமாக , அவனும் கடைசி மீட்சியை முயற்சிக்க , போராட்டத்தில் அவன் கை மூட்டு கழன்று விட்டது. ஆவன் வலியில் வீரிட மாஸடர் விசிலடிக்க நான் விலக அவனுக்கு முதலுதவி செய்யபட ஓரு மாதிரியாக பதற்றம் தண்pந்நது. மாஸ்டர் என்னை புளுக ஆரம்பித்தார். ஏனக்கும் உச்சி குளிரந்தது. சரி சந்தோசமாக வீடு போகலாம் என்று நினைக்க மாஸ்டர் சொன்னார்…. சரி கடைசி மச் இவருக்கும் பண்டாரவுக்கும்…. ஏனக்கு மூச்சே நின்றுவிட்டது.
    பண்டார: 125 கிலோ பணியாரம். அவனா அசைஞ்சாதான் உண்டு. உடம்பை குறைக்கவென்று coaching சேர்ந்தவன். டார்வினின் கொள்கையின் படி டைனோசரிலிருந்து கூர்ப்படைந்தவன். அவனுடன் மோதுவதா?..! வசிலடித்ததும் மூச்சை பிடித்துக்கொண்டு பாயந்தேன். இடுப்பை பிடித்துவிட்டேன். காலை கொடுத்து நிதானமிழக்க செய்தேன், மலை சரிந்தது. கூடவே மகிழ்சிசியாக சரிந்தேன். ஆனால் … அவன் உருண்ட போது நானும் கூடவே உருண்டு விட்டேன். ஐயோ அம்மா! புல்டோசர் புளிந்த புக்கையாகி, முழி வெளிவந்த போது புரிமென்றகடு நாக்கில் தட்டுப்பட்டது. கடவுளே…..! கிச்சு கிச்சு சுட மூட்டிப்பார்த்தேன். பீப்பாய் பிழிந்தெடுத்துவிட்டது. மயங்கு நிலையடைந்தபோது எங்கோ கிணற்றில் இருந்து கிருஷ்ணன் குழல் வாசிப்பது போல் மாஸ்டரின் விசிலோசை கேட்டது. எப்படி எழுந்தென். எத்தனை தடைவ வாந்தி எடுத்தேன். எதுவுமே ஞாபகமில்லை. எல்லோருமாக என்னை தூக்கி ஆட்டோ ஒன்றில் போட்டு அனுப்பிவிட்டார்கள். அன்று விட்ட wrestlingதான் இன்னும் தெருவில் விசில் சத்தம் கேட்டாலும் நடுங்குகிறது. இப்போது எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி: நாய்க்கேன்டா போர்த்தேங்காய்?

    5 Responses

    1. அருமையான பதிவு. . .
      உங்கள் எழுத்துநடைநன்றாக இருக்கிறது

      இனிவரும் பதிவுகளை
      1) http://www.tamilish.com/
      2) http://tamilmanam.net/
      இணைக்க முயன்று பாருங்கள்

      For More : mayunathan@gmail.com

    2. ஊக்கமளிக்கும் உங்கள் பின்னூட்டலிற்கு என் கோடானு கோடி நன்றிகள் நண்பரே ! நிச்சயம் உங்கள் அறிவுறுத்தலை கவனத்திற் கொள்வேன்.

    3. உங்கள் பதிவு மிகவும் நகைச்சுவையாக உள்ளது. வாசித்து வாசித்து சிரித்தேன், தொடர்ந்து எழுதுங்கள்.

    4. உதேன் அண்ண உந்த வில்லங்கம்..பேசாம டேபிள் டென்னிஸ் விளையாடியிருக்கலாமே?