புதிதாய் பொங்கிடுவோம்-கொஞ்சம் சீரியசாய்


    நேற்று மாலை தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு விசிட் செய்திருந்தேன். கவியரங்கம்……. வழமைக்கு மாறாக இளைஞர்களையும் பார்வையாளராயும் பங்குபற்றுவோராயும் கொண்டிருந்து ஆச்சரியத்தை கிளப்பியது. தலைப்பு :புதிதாய்ப் பொங்கிடுவோம்...சூடு பறந்தது. கருத்துக்கள்.... சிந்திப்பதற்குரியவாயமைந்திருந்தன. அதில் ஒருவர் கூறிய வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அவர் கூறியதாவது, தமிழ் சாகப்போகிறது, தமிழை வளர்க்க காவியங்கள் தேவை. ஆனால் நாயகர்களாக கோலோச்சும் மன்னர்களை தேடாமல் இந்நாளைய வாழ்க்கையுடன் போராடும் சாதாரண மக்களை, அவர்களின் வெற்றி தோல்விகளை எமக்கு விளங்கும் தமிழில் வடித்து நாம் விழுந்த பள்ளங்களை எம் சந்ததிகளை தாண்டச் செய்து தமிழை வளர்பபோம். எத்தனை சத்தியமான வார்த்தை?
    1983 தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பானத்தில் ஒரு தந்தையாக தன் கடமையை செவ்வனே ஆற்றிய ஒவ்வொருவனும் ஒரு நாயகன் என்பது கருத்து. அவர்களின் வாழ்க்கை ஒரு காவியமாக்க பட வேண்டியது எதிர்கால சந்ததிக்கு வலி தாங்கும் சக்தியை கொடுக்கும் என்பது உண்மை. அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்லிலடங்குமா? இத்தனை இடப்பெயர்வுகளையும் இழப்புகளையும் ரணங்களையும் சுமந்து குடும்பத்தை காப்பதில் தம் இளமையையும் வலிமையையும் விரயம் செய்தவர்களை எப்படி உதாரண புருஷர்களாக்காமல் விடமுடியும். மாற்றீடாக அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் செய்ய வேண்டியது எம் கடமையல்லவா? உண்மையை சொல்கிறேன்… என் தந்தையின் நிலையில் அந்நேரங்களில் நானிருந்திருந்தால் சந்நியாசம் பூண்டிருப்பேனொ என்னவோ? வெளிக்கலாச்சாரங்களால் மாசுறும் எம் மகன்-தந்தை உறவுக்கு அவர்கள் ஒரு காவிய நாயகர்களே!

    “எமக்கு விளங்கும் தமிழ்” பற்றி அவர் கதைத்தபோது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. காரணம்… அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று. “இலங்கையின் அனைத்து பிரஜைகளும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் பதியவேண்டும், தவறுவபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்” என்று ஏதோ ஒரு வானொலி பிளிறியதும் நான் எம் புதிய அனெக்ஸ் குடியிருப்பாளரிடம் (ஒரு வயதான தாயார், ஒரு 23; வயது பிள்ளை :இன்னும் கலியாணம் ஆகவில்லை, கூடவே இன்னும் சில பெண்கள் ) சென்று “எக்ஸ்க்யூஸ் மீ ஆண்டி… டிபென்ஸ் மினிஸ்றி ஒரு நியூ றூல் கொண்டுவந்திருக்காங்க. சிடிசன்ஸ் எல்லாரும் அவங்கட வெப்சைட்ல கட்டாயம் ரெஜிஸ்டர் பண்ணணுமாம். நாங்க ரெஜிஸ்டர் பண்றதுனா உங்கட பேசனல் டிடேய்ல்ஸ் கொஞசம் தேவைப்படும் ” என்றேன். கொஞ்ச நேரம் விக்கித்து நின்றது மனுசி. மகளின் டிடெய்ல்ஸ் தர பயப்படுதாக்கும் என்று நினைத்த நான்; தர்ம சங்கடத்துடன் நிலமைய சமாளிக்க தயாரானபோது “சரி தம்பி அப்பிடி உங்களுக்கு கடிதம் ஏதாவது வந்தால் எடுத்து வைக்கிறேன்” என்றது. நான் என்ன இழவடா இது என்று முழிய பின்னால் நின்ற அந்த அழகான மகள் சொன்னது “நீங்க சொன்னது விளங்கேல்ல…..என்ன சொன்னனீங்க”. மகளுக்கு சண் காட்டப்போய் அசடு வழிந்த நான் திரும்ப தொடங்கினேன். “என்னெண்டால் அம்மா…. பாதுகாப்பு அமைச்சால்…உங்கட பிறந்த தினம் போல கொஞ்சம் தகவல் வேணும் தந்தீங்களெண்டால் நாங்களே பதிஞசு விடுறம்.” முடித்தபோது என்னைக்குறும்புடன் பார்த்த அவள் ID ஐ தந்துவிட்டு வெட்கமாகச் சிரித்தாள்.

    4 Responses

    1. பொங்கல் படம் இணைத்தமைக்கு காரணம் இருக்கு. மற்றைய படம் சொல்லும் செய்தி என்னவோ? :D

    2. ஆதிரை, உந்தப் பார்வைதான் பெண்களின் ஆயுதம். உதன் முன்னால் எந்தக் கொம்பனும் கலங்கிவிடுவான். ஆனால் உந்த ஆயுதம் எனக்கு நன்கு பழகிவிட்டது.ஆகவே புதிதாய் ஏதும் சேதியில்லை. :D

    3. //1983 தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பானத்தில் ஒரு தந்தையாக தன் கடமையை செவ்வனே ஆற்றிய ஒவ்வொருவனும் ஒரு நாயகன் என்பது கருத்து.//
      உங்கள் கருத்தின் ஆழம் மரத்தின் ஆணிவேர் போன்றது.
      //மாற்றீடாக அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் செய்ய வேண்டியது எம் கடமையல்லவா?//
      உங்கள் கடமையில் (எல்லோரினதும் கூட) வெற்றியடைய என் வாழ்த்துக்கள்

    4. மறுக்க முடியாத உண்மை. எத்தனை நாட்களுக்கு தான் பழைய சோழர் வரலாற்றையும் பாண்டியர் வரலாற்றையும் சொல்லிச் சொல்லி கதைப்பது. நீஙகள் சொல்லுவது மிக்கச் சரி. ஆனால் என்ன... எழுதி முடிக்க முதல் எத்தனை றோல் டிசு (tissue) முடியுமோ தெரியாது.... கண்ணீரைத் துடைப்பதற்கு.