கொள்ளிப் பானை















    தவித்த வாய்க்கு தண்ணீர் தருவதே
    தலையாய கடமையென்றான் - குயவன்
    ஊரெல்லாம் காட்டி ஒரு தந்திரப் பானை செய்தான் - அதை
    கூட வாழ்ந்து குழி பறித்தவன் கோலமிட்டழகு செய்தான்

    கூடப்பிறந்து கற்பழித்தவனும்
    எரிந்த வீட்டில் அடித்துப்பிடுங்கியவனும்
    நக்கிய எச்சிலில்
    பானை மினுமினுத்தது.

    ஊரெல்லாம் சடங்காய் கைதட்டிக் கலகலக்க
    கள்ளச்சிரிப்புடன் உள்ளே விஷமூற்றி அபலையிடம் கொடுத்தான் - கயவன்
    பாச வேஷத்துடன்; சேலை நுனி பற்றிச் சொன்னான்
    “குடித்துவிடு பெண்ணே வசந்தம் வருமுனக்கினி”.

    வீர தாகத்துடன் சாக ஆசைதான் அவளுக்கு – ஆனால்
    அவனுரிந்தால் துகில் தர இங்கு கிருஷ்ணர் யாரும் இல்லை.
    பானையை உடைத்தவனுக்கெல்லாம் உலகம் பயங்கரப் பெயரிட்டால்….
    முடியாது… “கொடு உன் வசந்தத்தை நான் குடித்து விடுகின்றேன்”.

    வசீகரன்

    2 Responses

    1. எல்லாருக்கும் புரிவது போல எழுத ஆசைதான். ஆனால் புல்லட்டை என் மண்டையில் வாங்க எனக்கு விருப்பமில்லை. லசந்தக்கள் வாழ அனுமதிக்கப்படும்போது நான் தெளிவாய் எழுதுவேன்.

    2. உள்ளக் குமுறல் புரிகிறது..
      உறுதியுடன் இருப்பதே சந்தோசம்
      வசந்தம் விரைவில் உங்களை வரவேற்கும்..