எம் ஊரில் வருடாந்தம் புதுவருடப்பிறப்பை ஒட்டி சுதேசியத்திருநாட் கொண்டாட்ட விழா என்ற ஒன்றை நடத்துவார்கள் (அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று எனக்கு இப்பவும் தெரியாது )… ஆனால் சித்திரைப்பிறப்புக்கு ஒரு மாதம் முதலே எம் கிராமம் ரணகளமாகிவிடும்.. காரணம் , தொடர்ச்சியாக கல்வி கலைப்போட்டிகள் என்று மாதம் முழுவதும் நடாத்தப்பட்டு பின்னர் சித்திரைப்பிறப்புக்கு முதல் நாள் காலை முதல் மாலை வரை விளையாட்டுபோட்டிகளும் மறுநாள் இரவு தொடங்கி விடிய விடிய கலைநிகழ்ச்சிகளும் பரிசு வழங்கலுமாக அல்லோலகல்லோலப்பட்டு , ஆகக்குறைந்தது இரண்டு மூன்று வெட்டுக்குத்துகளோடுதான் சீசன் முடியும்…

கலைநிகழ்சிகள் வழங்குவதில் எம்மூரில் இருந்த இரு நுண்கலை ட்யூசன்களிடம் ஆரோக்கியமான போட்டி காணப்பட்டது.. அத்துடன் பரிசாக நிறைய கதைப்புத்தகங்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.. இந்த நிகழ்ச்சிகளின் சிறப்பினால் பக்கத்து ஊர் மக்கள் கடைசி இருநாள் நிகழ்வுகளை காண குழுமி விடுவர். இப்படிப்புகழ் பெற்ற நிகழ்ச்சி 2002 ஆம் ஆண்டில் நடந்த 85 ஆவது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா வரை சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவு காலம் ஒழுங்காக எப்படி நடக்கலாம் என்று எவன் பார்வை பட்டதோ தெரியாது 2003 ம் ஆண்டுக்குரிய விழாக் கமிட்டி தெரிதலில் சிக்கல் உண்டாகியது.. பலகாலமாக திண்ணைத்தலைவராக இருந்த பழைய போஸ்ட்மாஸ்டர் பொன்னைய்யா பெரிய கட்டுடன் வீடு திரும்பிய போதுதான் புரிந்தது மீட்டிங்கில் எவனோ மிச்சமிருந்த இரண்டு பல்லையும் புடுங்கி விட்டானென்று..
*********************************** பகுதி 2 **************************************
2002 இல் புலம்பெயர்ந்தோரின் வருகைகளும் பந்தாக்களும் சமுகத்தில் பெரிய மாறுதல்களை உருவாக்கியது.. அதிலொன்றுதான் திடீர்ப்பணப் புழக்கம்.. கனடாவிலிருந்து வந்த கனகசிங்கத்தாரின் மகன் காலைக்கடன் கழிக்க போவதற்கு கார் பிடிக்க ஆரம்பித்ததன் விளைவு ஓட்டைக்கார் வைத்திருந்தவர்களும் ஆட்டோக்காரர்களும் ஆயிரம் ரூபாத்தாளில் காதுகுடைய ஆரம்பித்தனர்.. மேலும் அந்தாட்டிக்காவில் பென்குவின் முட்டை விற்று வந்த அய்யப்பற்ற மனுசியின்தம்பி அவர் குடிசைக்கு அட்டாச் பாத்ரூம் கட்டிக்குடுத்ததில் மேசன் காபென்டர்கள் எல்லாம் ஐபோனில் டைம் செடியூல் பண்ணத்தொடங்கியிருந்தனர்.. இக்கால கட்டத்தில் சுதேசிய திருநாட்கொண்டாட்டவிழா நீருவாகக்குழு அமைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது..
வழமையாக எம் கிராமத்திலிருந்த படித்த பெரிய மக்களே விழாவை நடத்தி பணவிவகாரங்களை கையாண்டு சில இடங்களில் தம் கைக்காசையும் போட்டு சிறப்பாக நடத்தி முடிப்பர்.. விழாவின் சிறப்பு விருந்தினர்களும் படித்த பெரிய மக்களாயும் விழா குழுவிற்கு தனிப்பட்ட ரீதியில் உதவி செய்பவர்களாயும் இருப்பர்.. வழமையாக பங்கேற்று பாராட்டி பரிசுகளுடன் செல்லும் படிக்காத சமூகம் , இம்முறை கையில் காசு இருந்ததால் சற்று நிருவாக குழுவில் பதவி கேட்டு ரகளை செய்தது..கமிட்டியில் ஆட்டோ மணியும் சீமெந்துக்கடை சச்சியும் பதவிக்கு போட்டியிட்டனர்.. “படிப்பறிவில்லாத எருமையள் நீங்கள் என்னத்தையடா கிழிக்கப்போறியள் “என்ற பொன்னையருக்குதான் போன பகுதியில் பக்குவமாக பல்லு கழற்றப்பட்டிருந்தது. ஏகோபித்த எதிர்ப்பாலும் பணச்செருக்காலும் விழாத்தலைமை படிக்காத குழுவிடம் சென்றுவிட , படித்த மிகுதி உறுப்பினர்கள் அனைவரும் காறித்துப்பிவிட்டு வெளியேறிவிட , விழாப்பொறுப்பு முற்றுமுழுதாக பாமரர்கள் கையில்..
படித்தவர் என்று தம்மை காட்டிக்கொள்ள நினைத்த யாவரும் நிதி சேகரிப்புக்கு வந்தவர்களுக்கு கதவை படீரென சாத்தியும் , கலை நிகழ்ச்சிகளில் தங்கள் பிள்ளைகளை பங்குபெற வேணாமென வலியுறுத்தியும் எவ்வாறாயினும் தம் கிராம விழாவை தாமே நாறடிப்பதென கங்கணம் கட்டிக்கொண்டனர். தற்போதைய விழாக்குழுவுக்கு அனுபவமின்மையால் மூச்சுத்திணறினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் ஏதோ நடாத்திக்கொண்டிருந்தார்கள். கடைசிநாளும் வந்துவிட்டது..
விளையாட்டுப் போட்டி தினத்தன்று பெரிய அடிதடி. மரதன் ஓட்டப்போட்டியில் நடந்த அடிபாட்டில் பார்வையாளர்கள் ஓட்ட வீரர்களை முந்தி வேட்டி அவிழ அவிழ கோமணத்தை பிடித்தபடி முழுமூச்சாக ஓடிக்கொண்டிருந்தனர். பின்னர் சைக்கிளோட்டத்தில் வீரர்களை நடுவில் யாரோ புகுந்து அடித்தில் அவர்க்ள மிச்சமாய்கிடைத்த றிம், பெல்லுடன் காக்க காக்க என்று கந்த சட்டிக்கவசம் பாடிக்கொண்டு, ஒரு சுருத்திக்காக பெல்லையும் அடித்தவாறு வேர்க்க விறுவிறுக்க வெறுங்காலில் ஓடிக்கொண்டிருந்தனர். இவ்வாறே தலையணைச்சண்டையில் விசிலடித்த நடுவரை தூக்கிப்போட்டு பஞ்சை வாயில் திணித்து துணியை மூக்கால் எடுத்துக்கொண்டிருந்தனர்.. இது எல்லாத்துக்கும் காரணம் இம்முறை நடத்துநர்கள் மீது யாருக்கும் ஒரு பயபக்தியிருக்கவில்லை..
கூட இருந்து தவறணையில் தண்ணியடிச்சவன் விழா நடத்தினா எப்பிடி பயபக்தி வரும்? என்னத்தை சொன்னாலும் படிச்சவன் சொன்னபோது வாய்பொத்திகேட்டவனெல்லாம் நண்பனும் , தன் கூட்டும் சொன்னபோது இவர் ஆர் எனக்கு சொல்ல என்று எரிச்சலபட்டதன் விளைவு விழாக்குழுவும் பிய்ந்துபீசாகிப்போய் அடுத்தநாள் இரவு கலைநிகழ்ச்சி செய்ய ஆளில்லை.. எப்பிடியோ தலைவர் ஆட்டோ மணியம் தன் செட்டுகள் கொஞ்சத்தை சேர்ந்து எப்பிடியோ இரவு நிகழ்ச்சியையாவது சக்ஸஸ் புல்லாக நடத்தி முடித்துவிடுவதில் உறுதியாயிருந்தார்.
காரணம் அஞ்சாறு வெளிநாட்டு காரர் ஸ்பொன்சர் பண்ணியதில் நல்லதொரு இசைக்குழுவை ஏற்பாடு செய்துவிட்டிருந்தார். மேலும் ஒரு நகைச்சுவை நாடகம் சக்ஸஸ் புல்லாகிவிடும்.. இரண்டையும் சும்மா கலக்கலா நடத்தி , சனம் உதைபபற்றி நாலுநாள் கதைச்சாலே உந்த படிச்ச பந்தாக்காரருக்கெல்லம் காத்து புடுங்கி விட்டமாதிரி ஆயிரும் என சந்தோசப்பட்டார்..
தொடரும்….
1 Response
பகிர்வு அருமை நண்பா
Post a Comment