வருமுன் காப்போம்


  ***********************************************************************************
  மாலை வெயில் பட்டு வானம் சிவந்து கிடந்தது…காற்று வீசியதால் மணல் துடைக்கப்பட்ட முற்றத்தில் , ஒரு புல் பாதி காய்ந்து போய் தனியே நின்று ஆடிக்கொண்டிருந்தது … கவலை தோய்ந்த முகத்துடன் குடிசையிலிருந்து வெளியே வந்த சுகுமார் , தலைக்குமேல் அவலமாக கத்திக்கொண்டு பறந்த ஆள்காட்டிக்குருவிகளினைப் பார்த்து விட்டு பெருமூச்சுடன் உள்ளே சென்றான்… காய்ச்சலில் முனகிக்கொண்டிருந்த தன் நான்கு வயது மகனையும் , பதற்றத்தை மறைக்க கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த மனைவியையும் நோக்கியவாறு மூலையில் குந்தினான்..

  “நாளைக்கோ நாளையண்டைக்கோ எப்பிடியாவது வெளிக்கிட்டுத்தானாகவேணும் .. எங்க போய் எப்பிடி சமாளிக்கிறதோ தெரியேல்லயே கடவுளே“ …

  தொலைவில் கும் என்ற ஓசை கேட்டதும் படலை ஒரு முறை ஆடி நின்றது…


  ************************************************************************************


  கட்டுநாயக்காவில் விசேட ஜெட்டிலிருந்து இறங்கிய ஜெயப்பிரகாஷை பதட்டமான முகத்துடன் இரு வெள்ளைக்காரர் வரவேற்றனர் …

  ஹலோ ஜெயா…ப்பிரா..கா…ஷ் சோகோமா… argh... It is very difficult to pronounce your name

  It's ok call me Jeffry

  Sorry for the inconvenience caused. Only you can handle this situation… ( இனி வரும் உரையாடல்கள் அனைத்தும் ஓரளவு தமிழில் மொழிமாற்றம் செய்து தரப்படுகிறது..)

  பிரச்சனையில்லை… ஆனால் நான் மிகவும் களைப்பாகவுள்ளேன்… இளைப்பாறுவதற்குரிய ஏற்பாடுகளை செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்…

  நிச்சயமாக சேர்.. ஒரு பெயர் பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்…இப்படி வாருங்கள்…

  சரி எப்போது ஸ்தலத்துக்கு போகிறோம்?

  நாளைக்கு காலை சேர்.. ஹெலிகொப்டர் பகல் 10 மணிக்கு வரும். தயாராக இருங்கள்…

  *************************************************************************************

  ஊரே காலியாகிவிட்டிருந்தது… மனைவியையும் பிள்ளையையும் இனிமேலும் வைத்திருக்க முடியாது என்று புரிந்து கொண்டுவிட்ட சுகுமார் , பாதுகாப்பான பிரதேசம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அண்ணர் கும்பத்துடன் இணைந்து கொண்டான்.. தோளில் பிள்ளை காய்ச்சலால் அனுங்கிக்கொண்டிருந்தது.. தமிழனுக்கு பிறந்ததுக்காக அந்த பிள்ளையும் தன்னுடன் துன்பப்படுவதை கண்டு அவன் கண்கள் மௌனமாய் அழுதன.. ஆனால் தன் மனைவியிடம் தற்போது தெரிந்த உறுதி அவனுக்கு ஒரு தைரியத்தை தர விறுவிறுவென்று நடக்கலானான்..

  *************************************************************************************


  மறுநாள் காலை மியுசியத்தில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்..

  Good morning Gentleman... ( இனி வரும் உரையாடல்கள் அனைத்தும் ஓரளவு தமிழில் மொழிமாற்றம் செய்து தரப்படுகிறது..)
  என்னுடைய பெயர் Dr.S.D.ஜெப்ரீ… நான் அமெரிக்காவின் UTAH மியுசியத்தின் தலைமை பொறுப்பாளர்.. உங்கள் நாட்டின் வடபகுதியில வசித்த இயக்கர் நாகர் போன்ற பழங்குடிகள் தொடர்பான ஆராய்ச்சியில் என் உதவியை கோரியிருந்தார்கள்..

  ஆ! டொக்டர் ஜெப்ரீ… உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.. இதோ இந்த ஆவணங்களை என் மேலதிகாரி உங்களிடம் தரச்சொன்னார்..

  ம்ம்! சரியாக இருக்கிறன..ஆமாம் இவை இயக்க நாகர்களின் எழுத்துக்கள் அடங்கிய சுவடிகள்.. மிகவும் அரிதானவை.. இந்த ஆராய்ச்சியில் மிகவும் பயன்படுமென கருதுகிறேன்.. நன்றி

  வெல்கம் சேர்…

  *************************************************************************************

  மரநிழலில் இருந்து , யாரோ நிவாரணமாக தந்த கஞ்சியைக்குடித்து இரண்டு நாட்களை போக்கியாகிவிட்டது.. ஆனால் மறுபடியும் பாதுகாப்பு பிரதேசம் மாற்றப்பட்டு விட்டதாம்.. இப்போது மீண்டும் இடம்பெயர வேண்டுமாம்.. மகனின் நிலமை மோசமாகிக்கொண்டிருந்தது.. அவனை இழக்கப்போகிறோம் என்று சுகுமாருக்கு
  தோன்றியது .. கன்னத்தில் வழிந்த கண்ணீர் மடியில் இருந்த மகனில் பட்டபோது அவன் மெதுவாக கடினப்பட்டு கண்ணை திறந்தான்..

  “அப்பா .. அ”

  என்னப்பன் ! சொல்லண ராசா! என்ர குஞ்சு ! என்ன செய்யுது…

  அம்மா அ!

  “இந்தா உதில தான் நிக்கிறா குஞ்சுக்கு சாப்பாடு வாங்கியர… என்னப்பன் வேணுமுங்களுக்கு ?.. கேளுங்கோ என்னண்டாலும் அப்பா வாங்கித்தாறன்… “ சுகுமார் கேவிக்கேவி அழுதான்…

  பிள்ளை அமைதியாகிவிட்டது.. பயந்துபோய் , குழறியவாறு கன்னத்தை பிடித்து உலுக்கியபோது

  “அப்பா என்ட டொக்டர் கொப்பி! எங்கப்பா ? தாங்க…”

  கண்ணை மூடியவாறே கேட்டுவிட்டுவிட்டு , குழந்தை வலியில் முகத்தை நெளி
  க்க அதிர்நது போய்ப்பார்த்தான் சுகுமார்…

  *************************************************************************************

  ஹெலி கொப்டர் புழுதியை கிளப்பியவாறு இறங்கியது… பக்கத்தில நின்ற ஜீப்பில் ஏறிய ஜெப்ரீ களத்துக்கு வி
  ரையுமாறு சாரதியிடம் சொல்லிவிட்டு வரைபடத்தில் தொலைந்து போனான்.. ஓரத்தில் கிடந்த கோப்பில் இயக்கர் நாகர்களின் குறியீட்டு எழுத்துக்கள் படபடத்தன..


  *************************************************************************************

  அவசரமாக மனைவியைக் கூப்பிட்டு பிள்ளையைக் கையளித்தவன் , அவளின் "எங்கே?" என்ற பார்வைக்கு ,மகனின் சங்கிலியை குசினிக்கட்டில் புதைத்து விட்டு எடுக்க மறந்து விட்டதாக கூறியவாறு தன் குடிசையை நோக்கி ஓடலானான்.. மனைவி ஏதோ கோபமாக கத்தியது காதில் விழாவிட்டாலும் “ அண்ணாவோட போ நான் கெதியென வாறன்” சொல்லியவாறு பற்றைகளுக்குள் மறைந்து போனான்.

  *************************************************************************************

  ஜீப் உறுமல் நின்றதும் மெதுவாக நிமிர்ந்து பார்த்தான் ஜெப்ரீ… சிறிது தூரத்தில் ஒரு பள்ளத்தைச்சுற்றி நின்றவாறு சிலர் இவனைப்பார்த்தனர்… அருகே வந்த ஒருவன் “
  hello jeffree! welcome.. we have found a remaining.. We need some expertise in handling that That’s why you are here in a hurry“ என்றவாறு கண்ணடித்தான்… எரிச்சலுடன்; பள்ளத்துக்கு அருகில் சென்று உள்ளே ஒரு உக்கிய இரும்புப்பெட்டியைக் கண்டு பெருமூச்சொன்றை விட்டான்..

  *************************************************************************************

  பிள்ளையின் சங்கிலி மனுசி வைத்திருந்த மூட்டையில் பாதுகாப்பாக இருக்கிறதென்று அவனுக்கு தெரியும்… அவன் ஓடுவதற்கு காரணம் அதுவல்ல.. அவன் பிள்ளையின் கொப்பி… மாட்டுத்தாள்ப்பேப்பர் கவரிட்டு பொலித்தீன் உறை போட்ட ஒரு நாற்பது பக்க கொப்பி..

  அவன் சந்ததியில் யாரும் படித்ததில்லை.. எல்லாரும் காட்டுவேலைதான்.. ஒவ்வொருநாளும் கஞ்சிக்கு காயப்படும் பிழைப்பு… ஜாலியா சைக்கிளில சுத்துற வாத்திமார பாத்து நாம படிக்காததால்தானே இதெல்லாம் என்று வாழ்க்கை வெறுத்துப்போய் இருந்தவனுக்கு நம்பிக்கையூட்டினாள் அவனுடைய மச்சாள் வனிதா. நாங்க படிக்காட்டி என்ன எங்கட பிள்ளையள படிப்பிப்பம் எண்டு சொல்லிய அவளை கரம் பிடித்து கனகாலம் பொறுத்துக்கிடைச்ச பிள்ளைதான் சுகந்தன். பிள்ளைக்கு படிப்பிக்க வேணும் அவன டொக்டராக்க வேணும் எண்டு தினமும் காட்டுக்கு போய் வந்து நிறைய டொக்டர் கதை சொல்லுவான் சுகுமார்.. அவன்தான் தன்ட வாழ்க்கை.. அவன்ட படிப்புதான் தன்ட வாழ்க்கை எண்டு சுகுமார் மாறிவிட்டான்.. நாலுவயசில பிள்ளையும் பெயர் என்னண்டு கேட்டால் டொக்டர் எண்டு சொல்லுகிற அளவுக்கு வந்திட்டுது.. ஒருநாள் பெடியன் பக்கத்து வீட்டு அக்காட்ட கொப்பியள பாத்து தனக்கும் ஒண்டு வாங்கித்தரச் கேட்டான்.. 40 பக்கம் கொப்பி ஒண்டு வாங்கி குடுக்க , அதை பக்கத்து வீட்டு அக்காட்ட குடுத்து உறைபோட்டுட்டு இரவு அப்பாக்கு முன்னால சம்மாடி கட்டி உட்கார்ந்து ஏதாவது சொல்லித்தரச் சொன்னான்… சுகுமாருக்கு எழுத படிக்க தெரியாது.. “அப்பா நாளைக்கு பிள்ளைக்கு சொல்லித்தாறன்” என்று மறுத்தவன் கவலையை மறைக்க மறுபக்கம் திரும்பிய போது பிள்ளை மௌனமாக குனிந்து கஸ்டப்பட்டு கொப்பியில் கிறுக்க ஆரம்பித்தது. சட்டென்று பூரிப்புடன் நிமிர்ந்து அப்பா இதுதான் உங்கட பெயர் என்ற போது , கொப்பியை பார்த்த சுகுமார் வாய் பிளந்து நிற்க பிள்ளை சொன்னது “பக்கத்து வீட்டு அக்காதான் எழுதிக்காட்டினவா.. நல்லாருக்கா?”.
  அதில் சுகுமார் மழலைத்தமிழில் சிரித்துக்கொண்டிருந்தான்

  கண்களில் கண்ணீருடன் பிள்ளையைத்தழுவிக்கொண்டான்.. அடுத்த நாள் கொப்பியின் முகப்பில் பெயர் என்ற இடத்தில் டொக்டர் என்று எழுதி நிரப்பி விட்டிருந்தான்
  குட்டி.. அதை சுகுமார் வருவோர் போவோருக்கெல்லாம் காட்டி பெருமை பட்டுக்கொண்டிருந்தான்..

  இப்போது மரணத்தறுவாயில் அந்தக்கொப்பியைத்தான் கேட்கிறான பெடியன்.. அதை ஒரு பொலித்தீன் பாக்கில சுத்தி வாங்கு தலைமாட்டின் கீழ் வைத்திருந்தவன் அப்படியே மறந்து விட்டான்.. எப்படியாவது எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் ஓடிக்கொண்டிருந்தான் சுகுமார்… அதோ குடிசை தெரிகிறது..

  *************************************************************************************

  கிண்டும்போது பெட்டியின் மூலைப்புறத்தை சேதமாக்கிவிட்டிருந்தார்கள்.. ஜெப்ரீயின் சிறப்புத்தேர்ச்சி கைகொடுத்தாலும் கவனமாக மேலே எடுக்க போதும் போதுமென்றாகி விட்டது… பெட்டியை திறந்தபோது உள்ளே மக்கல்களும் மண்ணும் மட்டுமே காணப்பட்டது.. எல்லாரும் அதிருப்தி கலந்த பெருமூன்சை விட்டவாறு கலைந்தார்கள்.. ஜெப்ரி மெதுவாக குனிந்து உள்புறத்தை கூர்மையாக அவதானித்தான்… அட அவற்றில் சில எலும்புத்துண்டுகள் மனித பற்கள் நகங்கள்.. பரபரப்படைந்த அவன் விரைவாக டார்ச்சை எடுத்துவருமாறு பணித்தான்..


  *************************************************************************************

  விரைவாக ஓடிச்சென்று வாங்கைப்பிரட்டி செருகப்பட்டிருந்த பொலித்தீன் பையை எடுத்தவன் அதை முத்தமிட்டவாறு வெளி
  யே ஓடிவர படீரென்ற பலத்த சத்தத்துடன் அருகில் ஏதோ ஒன்று விழுந்து வெடித்தது.. பொலபொலவென்று குடிசை உடைந்து அவன் மேல் விழுந்ததும் சுகுமாருக்கு எல்லாம் இருளத்தொடங்கியது..
  மகனை நினைத்தவாறு கண்களை மூடினான்…

  *************************************************************************************

  மிக அவதானத்துடன் பெட்டிக்குள்ளிருந்த பொருட்களை ஆராயலானான்… சில எலும்புத்துண்டுகள் , ஒன்றுடன் ஒன்று ஒட்டிய ஒரு கடதாசிக்கற்றை , இன்னும் சில பொலித்தீன துகள்கள்.. இவற்றை ஒரு ட்ரேயில் இட்டு விட்டு நாளை தொடர்வோமெனக் கூறி படுக்கச் சென்றான் ஜெப்ரீ… அவன் மனதுள் அடுத்து என்ன செய்யலாம் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது..


  *************************************************************************************

  மெதுவாக அவன் கண்முழித்தபோது காலில் பயங்கரமான வலியெடுத்தது.. முழங்காலுக்கு கீழ் முறிந்து தொங்கியது.. கண்விழி ஒரு பக்கம் பியந்துவிட்டிருந்தது..கை முழங்கைக்கு கீழ் இயங்கவில்லை… அவனுக்கு புரிந்துவிட்டது இனி எதுவும் செய்வதற்கில்லை.. இப்டியே கிடந்து சாகவேண்டியதுதானென்று… ஆனால் “தம்பீ! தம்பி சுகுமார்” என்று தேடிவரும் அண்ணரின் குரல் அருகில் கேட்டபோது தன்னை வைத்துக்கொண்டு தன் சொந்தங்கள் படப்போகும் பாடு கண்முன் தோன்ற , ஊர்ந்து ஊர்ந்து சென்று பங்கருக்குள் விழுந்து வலியைப்பொறுத்தவாறு அதற்குள் இருந்த றங்குப்பெட்டிக்குள் ஏறி மூடிக்கொணடு மயங்கிப்போனான்;.. ஒரு மூன்று மணித்தியாலஙகளில் ஏதோ ஒன்று அந்த பங்கருக்குமேலால் ஏறிப்போனபோது அந்த கொப்பியை கட்டிப்பிடித்தபடி மண்ணோடு மண்ணாகிவிட்டிருந்தான சுகுமார்..

  அங்கே சுகந்தனுக்கு காயச்சல் குறைய ஆரம்பித்து விட்டிருந்தது...

  ************************************************************************************

  உரிய இரசாயன சேர்வைகளை கலந்து காகிதக்கற்றை தனித்தனியே பிரித்த போது அதில மங்கலாhக ஒரு சொல் தெரிந்தது… ஏதோ உள்ளுணர்வு தூண்ட அதை உற்றுப்பார்த்தவன் குழப்பத்துடன் தன்னிடமிருந்த இயக்கர் நாகர் சொல்வடிவங்களுடன் அதை ஒப்பிட்டுப்பார்த்தான்.. சற்றேனும் பொருந்தவில்லை… சே என்று வெறுப்பாக மேசையில் குத்திய போது அந்த காகிதம் பறந்துபோய் சுற்றியிருந்த வடலிகளுக்கு மறைந்துபோனது.. வெறுப்புடன் ஒரு முறை அந்த திக்கை நோக்கிவிட்டு பாஸ்போட்டை சரி பார்க்கலானான்..

  *************************************************************************************

  இயக்கர் நாகர் தொடர்பாக ஆராயந்து இலங்கை அரசிடம் பெயரெடுக்க வந்த அந்த ஜெயப்பிரகாசுக்கு , பாவம் , அவன் அமெரிக்காவில் வாழும் 21வது தலைமுறை ஈழத்தமிழனென்பதோ , அவனது குடும்பப்பெயர் சுகுமார் என்று வர காரணமானவர் ,அவன் இப்போது எந்த இடத்தில் நிற்கிறானோ அந்த இடத்தில் மறைந்த அவன் மூதாதை என்பதோ , தமிழ் என்றதோர் மொழி இருந்ததென்பதையோ அறிந்திருக்க வாய்ப்பில்லை…

  ட்ரைவர் கொண்டுவந்த பத்திரத்தில்
  Jeypragash Daniel Sugumar என்று ஒப்பமிட்டு 11-08-3009 என்று திகதியிட்டபோது வடலியில் செருகியிருந்த கடதாசித்துண்டில் 2009 இன் சுகுமார் துடிதுடித்தான்..


  *************************************************************************************  18 Responses

  1. எல்லாரும் எழுதுறாஙகளே நானும் எழுதினால் என்ன எண்டுட்டு சிறுகதை எழுத இறங்கினா , அது ஏதோ அரிச்சந்திர புராணம் மயான காண்டம் மாதிரி இழுக்க வெளிக்கிட பிறகு ப்ரேக் போட்டு நிப்பாட்டியிருக்கன்.. ஆகையால சொதப்பிட்டுது.. நேரம் இருக்கிறாக்கள் வாசியுங்கோ... வாறன்..

  2. நல்ல கதை இரண்டு பகுதியாக கதை சொல்லி இறுதியில் ஒன்றாக்கிவிட்டார்கள். இடையிடையே புல்லட் தன் ஆங்கிலப் புலமையைக் காட்டியுள்ளார்.

  3. அட நீங்களுமா...

   கிளம்பித்தாங்கையா.... கிளம்பித்தாங்க..........
   நடக்கட்டும்... நடக்கட்டும் நல்லபடியா நடக்கட்டும். வாழ்த்துக்கள்.....

  4. நல்லா யோசிக்கிறீங்க... என்னதான் யோசிச்சாலும் நீங்க வருமுன் காக்க ஏலாது. எங்கட சிந்தனாவாதிட திறமை அப்பிடி...

   நல்லாயிருக்கு கதை :)

  5. வாழ்த்துக்கள்.. நல்லாயிக்கு.. இரண்டு திசைகளில் பயணித்த கோடுகள் ஈழத்தமிழன் என்ன புள்ளியில் சந்தித்து இதயங்களைக் கனக்க வைக்கின்றது..

   ஆனால் ஏன் இந்த ”வருமுன் காக்க” என்ன தலைப்புத்தான் என்று புரியவில்லை..

  6. எதிர்கால யதார்த்தம் இது தான்.. மனசு கனக்கப் பண்ணி விட்டீர்கள்..
   வாழ்த்துக்கள் புல்லட் ..

   தொடர்ந்து சிறுகதை எழுத்தாளராக உலா வரலாம்.. :)

   நான் கொடுத்த பட்டம் வீணாகவில்லை...


   பி.கு - நான் ஓரளவு முடிவு எதிர்பார்த்தேன்..

  7. ஆனால் ஏன் இந்த ”வருமுன் காக்க” என்ன தலைப்புத்தான் என்று புரியவில்லை.
   .
   .
   எனக்கும் தான் !

  8. This comment has been removed by the author.
  9. கண்களில் கண்ணீர் எட்டிப்பாக்கிறது புல்லட்..
   நகைச்சுவையாக பதிவிட்டு வந்திட்டு ஏன் இப்பிடி சீரியசா???? :(
   ”வருமுன் காப்போம்” என்று தலைப்பு இப்பிடி பழைய வரலாற்றை மறந்து நாகரீக மோகத்தில் ஒண்ணுமே தெரியாது புரியாது மக்கள் மாறி செல்வதை தடுப்போம் என்றதுக்காக இருக்கலாம்.
   சரியா???

  10. வந்தியண்ணா என்ட ஆங்கிலபுலமைய காட்டியதற்காக முனைவர் பட்டம் கிடையாதோ?

   சந்ரு நன்றி சந்ரு...

   கருத்துக்க நன்றி கண்ணன் ... பதிவர் சந்திப்புக்கு வாறீங்கதானே?

   சுபானு கோவை : கருத்துக்கு நன்றி.. 3009 இல் இப்படி வருமுன் தமிழை கலாச்சாரத்தை காப்போம் என்பதைதான் அப“படி சுருக்கிவிட்டேன்.. கார்த்தி சரியாக கண்டுபிடித்து கண்ணீர் விட்டுட்டார்..

   கார்த்தி ஒரேயடியா மொக்கையை போட்டுக்கொண்டிருந்தால் அலுத்துவிடும்.. அதுதான் கொஞ்சம் செஞ்சுக்காக.. பின்னூட்டத்திற்கு நன்றிகள்

   லோசன் அண்ணா.. நீங்கள்வேற ஏத்திவிட்டுட்டியள்.. நானும் பயந்து பயந்துதான் எழுதினது எங்க பேரரசு காந்தியைப்பற்றி படமெடுத்த கதையா போகப்போடுதோ எண்டு..நல்லகாலம்... சனம் அக்செப்ட் பண்ணி பின்னூட்டி பத்து ஓட்டும் போட்டுட்டாங்கள்.. எனக்கு பெரிய சந்தோசம்... நன்றி அண்ணா..

  11. நன்றாக இருக்கிறது. தொடருங்கள்

  12. புல்லட்டு,
   நன்னாதான் இருக்கு, இருந்தாலும் நன்னா நடிச்ச விவேக்கு கருத்து சொல்ல வெளிக்கிட்டு நாசமா போனமாதிரி இல்லாட்டா சரி... ஏனெண்டா உங்கடை தரமான காமடி நடை எங்களுக்கு தேவை எப்பவும்

   நன்றிகள்

  13. அடப்பாவி!!! நானும் இப்போதுள்ள சமூகப்பிரச்சனையான பன்னிக்காய்ச்சல் பத்தி ஏதோ எழுதியிருக்கானோன்னு உள்ளே வந்தா பயபுள்ள....
   சிறுகதையாம்ல....ஹி ஹி ஹி
   ஆனாலும் நல்லாயிருக்குங்னா!!!

  14. எதிர்கால யதார்த்ததின் ஆழமான சிந்தனை! வாழ்த்துக்கள்

  15. :-)) என்னத்த சொல்ல. நம்ம நிலமை இப்படி ஆச்சு..:-((

   பகுதி பகுதியாக பிரிக்காமல் எழுதியிருக்கலாம், அதேவேளை இது 2 கதை என்றும் முடிவு இப்படித்தான் இருக்கும் என்றும் முதலில் தெரிந்து விடுகின்றது புல்லட். அதைச் சரிப்பண்ணினால்...இன்னும் நல்லா இருக்கும் :-)

  16. உண்மையில் கதை நன்றாக இருக்கிறது புல்லட். வித்தியாசமாக சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  17. இப்படி நடந்தாலும் நடக்கலாம் யார் கண்டார்?

  18. பின்னூட்டியமைக்காக நன்றிகள் யாசவி சதீஸ் கலை யாழினி யோகா..

   இதொன்றும் நடக்கப்போகாததை சிந்தித்து எழுதவில்லை.. எதிர்காலத்தில் என் பிள்ளைக்கு தமிழ் மீடியமா ஆங்கில மீடியமா கல்வி என்று சிந்தித்த வேளைதான் இந்த எண்ணம் தோன்றியது..

   மோனா ... நிச்சயம் நகைச்சுவையை கைவிடமாட்டேன்..நன்றி பின்னூட்டியமைக்கு