வாழ்க்கையும் வெறுமையும் - கொஞ்சம் சீரியசாய்

  இன்று நான் கொஞ்சம் சீரியசாக எழுதப்போகிறேன்.. காரணம் மனசு ஏதோ போலவிருக்கிறது.. உங்கள் எல்லோரிடமும் அதில் காணப்படும் பாரத்தை இறக்கி வைக்கவேண்டும் என்ற விருப்பத்துடனேயே எழுதுகிறேன்.. அலுப்படிக்கிறது என்று போய்விடாது , வாசித்துவிட்டு உங்கள் எண்ணக்கருக்களை எழுதிவைத்துவிடுங்கள்.. தயவுசெய்து


  பிரச்சனை இதுதான்..  கடந்த வாரம் முழுவதும் என் ரூம் ஒரே அமளி துமளி.. காரணம் பக்கத்துவீட்டில் என் வயதையொத்த பெண்ணுக்கு கல்யாணம் … பல பிரதேசங்களிலுமிருந்து வந்த அவர்களின் உறவினர்கள் தங்கள் குழந்தைகளை என் ரூமில் வைத்திருக்குமாறு சொல்லிவிட்டு அரட்டை அடிக்க சென்று விட்டார்கள்.. மொத்தம் 7 குழந்தைகள்.. ஒவ்வொன்றும் இரண்டரை வயதிலிருந்து 8 வயது வரையுமானவை… ஆனால் எனக்கோ குழந்தைகளை கண்ணிலும் காட்டக்கூடாது… குழந்தைப்பிள்ளைக்கும் குட்டிநாய்க்கும் இடம் கொடுத்தலாகாது என்று சின்ன வயதில் என் பாட்டி சொல்லித்தந்தது என்னில் ஆழவே வேரூன்றியிருந்தது.. எனக்கு மாமா மாமி என்று ஒரு உறவுகளுமே அருகிலில்லாததால் (எல்லாருமே புலம் பெயர்ந்து ஓடிவிட்டார்கள்) இப்படியான குழந்தைகள் சகவாசம் சற்றுமே இல்லாது ஒரு விறைப்பான சூழலில சுயநலத்தோடு வாழ்ந்து வந்தேன்..


  மொத்தமாக ஏழு நாட்கள் என் ரூமை பயன்படுத்த அவர்கள் அனுமதி கேட்டார்கள்.. கனல் தெறிக்க முகமெல்லாம் சிவக்க “ என்னாது? “ என்று எழுந்த நான் ,
  அப்படியே பல்லுபுடுங்கிய பாம்பு போல அடங்கி அமர்ந்துவிட்டேன்..

  காரணம்… குழந்தைகளை தூக்கி வந்த அந்த கட்டிளம் குமரிகள்.. அந்த குழந்தைகளின் தாய்களின் தங்கைகளாக இருக்க வேண்டும் … எல்லாம் கண்களில் மன்மத பாணங்களுடன் உதட்டில் பருவத்தேனும் வழிய நின்றிருந்தால் காய்ந்த மாடு நான் என்னத்தை செய்ய? மண்டை தன்பாட்டுக்கு ஆடிவிட்டது..


  டெக்னிக் தெரிந்த பொம்பிளைகள் , எங்களை மாதிரி இளைஞர்களின வீக் பொயிண்டை பிடித்துவிட்டார்கள்.. உரிய உபகரணங்களுடன் வந்து உபத்திரவத்தை அப்லோட் செய்துவிட்டார்கள்..


  காரியம் ஆகியவுடன் காரிகைகள் தோள்களில் குழறிக்கொண்டிருந்த குஞ்சு குருமன்களையெல்லாம் கொட்டிவிட்டு போய்விடவே எனக்கு நிலமையின் விபரீதம் புரிந்தது.. தாய்மார் நால்வரும் அடுக்கடுக்காக குழந்தைகளின் ஸ்பெசல் தேவைகளை சொல்ல ஆரம்பித்தனர்.. எனக்கோ மண்டை விறைக்க ஆரம்பித்தது.. “தம்பி வலு நல்ல குணமான அன்பான பெடியன் எண்டு சொன்னவை .. அதுதான் உங்களை நம்பி தாறம்” எண்டு நடுநடுவில கொதிக்கிற ஐஸ் வேறு.. சிவனே என்று கேட்டுக்கொண்டிருந்தேன்..


  ஒருவாறு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்மார் போய்விட்டனர்.. அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அந்த வானரங்கள் இப்போது விடுவிடுவென்று கிட்ட வந்து மாமா என்றன .. சற்று அறிமுகமானதும் “அதைத்தா இதைத்தா” என்று ஊளையிட ஆரம்பித்தன.. “ம்கூம் ஏலாது ஏலாது” என்று திட்டவட்டமாக மறுத்துவிடவே எல்லாம் ஒரு லைனில் இருந்து வாள் வீல் கோள் மாள் என்று குழற ஆரம்பித்தன.. சிலது கொஞ்சம் முன்னேறி வந்த அடிக்கவும் கடிக்கவும் ஆரம்பித்தன.. நான் பதறியடித்துப் போய் மேசையின் மீது ஏறி குந்தியருந்தேன்…


  அப்போதுதான் கதவை தட்டி திறந்த படி கும்மென்று ஒரு குமரி வந்தாள் ... கையில் டீ ஆவி பறந்து கொண்டிருந்தது… அதற்குள் நான் மேசையிலிருந்து குதித்து பிள்ளைகள் கேட்ட ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க ஆரம்பித்தேன்.. என் 2500 ரூபாய் சேட்டு நிலத்தில தரதரவென் இழுபட்டது.. ஆசையாக பழகுவம் என்று வாங்கி வைத்திருந்த கிட்டார் ஹங்கர் ஒன்றால் தரும அடி வாங்கிக்கொண்டிருந்தது.. அழகாக அடுக்கி வைத்திருந்த அனைத்து பொருட்களும் உருள ஆரம்பித்தது.. நான் அவளுக்கு ஷோ காட்டுவதற்காக நடிக்கலானேன்..

  “ இஞ்ச வாங்கோ அப்பன்.. அப்பிடி செய்ய கூடாது .. பிள்ளைக்கு நோகுமல்லோ “.. என்று உருகி வழிவதை ரசித்த அவள்
  அப்படியே கதிரையொன்றில் அமர்ந்தவாறு கடைசியா பதிவர் சந்திப்பில் தந்த இருக்கிறம் புத்தகத்தை உருட்டலானாள்.. எனக்கோ தலை வெடித்தது.. நான் இந்த பிக்கல் பிடுங்கல்களுக்கிடையில் டீயை ஒருவாறு குடித்து கப்பை குடுத்ததும் என்னைப்பற்றி விசாரித்துவிட்டு ஒரு புன்னகையை தந்துவிட்டு போய்விட்டாள்.. நானோ இங்கு கண்ணெல்லாம் ரத்தச்சிவப்பாக அனல் பறக்க நின்று கொண்டிருந்தேன்.. பீடை பிசாசு என்று எல்லா குழந்தைகளையும் திட்டியவாறு ஓமென்று சொன்ன என்னை நானே நொந்து கொண்டேன்.. இப்படி நடந்த கொடுமை எல்லாவற்றையும் சொல்லப்போனால் இது மெகாசீரியலாகிவிடும்..


  எப்படி இதுகளை 1 கிழமை சமாளிப்பது என்று திட்டம் தீட்டியதில் கடைசியா நாம் எமது ஹாட்வெயார் டிசைனிங் இல் பயன்படுத்தும் முதலாவது படிமுறையை கையாண்டேன்…


  றிகுவார்மென்ட் அனாலிசிஸ்..
  ஒரு வழியாக ஒவ்வொன்றையும் சமாளிக்கும் விதத்தை கண்டுபிடித்துவிட்டேன்.. இரண்டரை வயது பெடியனுக்கு உயரமாக தூக்கிபோட்டு பிடிப்பது.. இன்னொன்றுக்கு கொம்பியுட்டரில்; பெயின்ட் அப்ளிகேசன். இன்னொன்றுக்கு கதை சொல்வது என்று எல்லாவற்றுக்கும் ஒரு அமைதியாக்கும் பொயிண்டை கண்டு பிடித்ததும் எனக்கும் சந்தோசம்.. அந்த தாய்மாருக்கும் அதிரிச்சி… அவை தாயாருடன் இருக்க விரும்பாமல் எனக்கு இம்சையை கூட்ட ஆரம்பித்தன.. என்னதான் உள்ளே ரத்தகளரியாக இருந்தாலும் முகம் எப்போதும்போல புன்னகை பூத்த வண்ணமே இருந்தது..


  ஒருவாறாக சனிஞாயிறு முடிந்ததும் எனக்கு ஒரே சந்தோசம்.. இனி ஒபிஸ் போனால் தப்பிவிடலாம்…


  கொம்ப்யுட்டர் முதல் சகல சாமானகளளையும் மூட்டைகட்டி மேசை மீது வைத்து பெட்சீட்டால் போர்த்திவிட்டு காலை 6 மணிக்கே ஒபீஸ் ஓடிவிட்டேன்.. பஸ்ஸில் ஏறும்போது கைவலித்தது.. முதல்நாள் நான் உந்த பிசாசுகளிடமிருந்து தப்பிப்பதற்காக தூங்குவது போல் நடிக்கும்போது வானரம் ஒன்று சேப்டி பின்னால் நறுக்கென்று குத்திவிட்டிருந்தது.. நான் அலறிய அலறலில் ஓடிய பக்கத்துவீட்டு நாய் இன்னும் திரும்பி வரவில்லை..


  ஒருவாறாக அந்த திருமணமும் வியாழனன்று முடிந்துவிட்டது… எனக்கு குழந்தைகள் மீது வெறுப்பு இன்னும் பலமடங்காக அதிகரித்து காணப்பட்டது போல தோன்றியதே தவிர சற்றேனும் குறைந்ததாக தெரியவி்ல்லை.. எவ்வளவு நாசம்? ஏறத்தாள 5000 ரூபாவுக்கு மேல் நட்டம்.. ஒரு நாள் காலை எழும்பும்போது நாசி அடைத்தது.. என்னடாவென்று பார்த்தால் முதல்நாள் வாங்கி வைத்திருந்த ரூம் ஸ்பிரேயை என்மீது முழுவதுமாக கொட்டிவிட்டிருந்தார்கள்.. கொந்தளித்து போயிருந்தென்.. சரி என்று எல்லாரும் புற்பபடப்போவதாக சொன்னதும் எனக்கு பயங்கர சந்தோசம்..

  நான் வேலையால் வந்ததும் தாய்மார் எல்லாப்பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து “பை சொல்லுங்கோ மாமாவுக்கு” என்ற போது அவை என் காலைக் கட்டிக்கொண்டு விசும்ப ஆரம்பித்தன.. முதலில் அதிர்ச்சி அடைந்த நான் கட்டிலில் விளங்க முடியா உணர்வுகளுடன் அமர்ந்த போது ஒவ்வொன்றும் என் கன்னத்தை தடவி ”எங்களோட வாங்கோ மாமா” என்ற போது எனக்குள் ஏதோ உடைந்ததை உணர்ந்தேன்.. உடனே பூபாலசிங்கத்துக்கு ஓடிப்போய் கையில் கிடந்த காசுக்கு என்னன்னவோ எல்லாம் வாஙகி வந்து கொடுத்ததும் அவர்கள் போய்விட்டார்கள்…  மறுபடியும் ரூம் மயான அமைதி… அந்த குமரிகளோ அவர்களின் குழிவிழுந்த கன்னங்களோ ஞாபகம் வரவில்லை.. அவர்கள் போய்வாறம் சொல்ல வந்தார்களா கதைத்தார்களா அதுவும் ஞாபகம் இல்லை.. ஏதோ மிகவும் பயமாக இருந்தது.. ஆறுவருட தனிமை உருவாக்கியருந்த இறுக்கத்தை ஏதோ ஒன்று படாரென்று உடைத்ததில் பயங்கரமாக வலித்தது..


  ஒரே நிசப்தம்… இந்த வலியில் என் 25வது பிறந்த நாளும் வந்து விட்டது… வாழ்க்கையில் எந்த காலத்தை எதிர்பார்த்து அந்த கரடுமுரடான பாதைகளில் நடந்து வந்தேனோ அது முடிவடைந்து விட்டது.. இனி நான் வளர்ந்த மனிதன்.. வாழ்க்கை கசக்கும்.. நோய்கள் வரும்.. மரணம் மெதுமெதுவாக அண்மிக்கும்… அந்த குழந்தைகள் பேன பிறகு ஒரு வெற்றிடத்தை உணர்ந்தேன்.. அதன்போது பல விடயங்களை சிந்தித்தேன்..
  நான் யாரைப்பார்த்து யாருக்காக யாரின் பாராட்டுதல்களில் வளர்ந்தேனோ அந்த சமூகம் இப்போது பாதி மரணித்து விட்டது.. பாதி முதுமையிலும் நோயிலும் தள்ளாடுகிறது.. அவர்கள் முன்னால் இப்படியெல்லாம் வாழ்ந்து காட்டவேண்டும் என்று சிந்தித்தது எல்லாம் இப்போது ஞாபகம் வந்து கிலியூட்டுகிறது.. அந்த வெறுமையின் உணர்சியில் அம்மாவை தெலைபேசியில் அழைந்தபோது என் குரல் நடுங்கியது ..  ஆறுவருடங்களுக்கு முன்னம் ஊரில் பெரிய மனுசராக இருந்தவர்கள் எல்லாரும் இறந்து போய்விட்டிருந்தார்கள்.. எங்கள் வீட்டில் முன்னாட்களில் அரிசி இடிக்க வரும் மனுசியை 17 வருடங்களின் பின்பு விசாரித்தேன்.. அதுவும் எப்போதோ இறந்து விட்டிருந்தது.. அந்த மனுசி சின்னப்பிள்ளையாகிய நான் எஞ்சினியரா வந்த தனக்கு வீடு கட்டித்தரவேணும் எண்டு கேட்டது மங்கலாக ஞாபகம் வந்து போனது..


  வெறுமை.. வெறுமை… வெறுமை… பயமாக இருக்கிறது…

  சில
  கேள்விகள் என்னை கவலைப்படவே செய்கிறன… எனக்குத் தெரியும் அவை இன்னும் ஓரிரு நட்களில் மறைந்துவிடும்.. மறுபடியு
  ம் பழைய புல்லட்டாகி நண்பர்களுடன் நடுரோட்டில் நின்று ஜொள்ளு விட ஆரம்பித்து விடுவேன்.. ஆனால் இந்த பீலிங் ஒரு வித்தியாசமாக ஒரு வித அழகாக இருக்கிறது .. வரும் கேள்விகளும் சற்று புதிரானவையாகவே இருக்கிறன.. அவற்றை பதிந்து வைத்திருக்க விரும்புகிறேன்… அவற்றைத்தான் நான் உங்களிடம் கேட்கவிருக்கிறேன்..

  உங்களில்
  25 வயதை கடந்தவர்கள் இந்த வெறுமையையும் பயத்தையும் உணரவில்லையா?  திருமணமாகி
  புதிய வட்டத்தை உருவாக்கியவர்கள் , நீங்கள் வளரந்தபோது உங்களை சுற்றியிருந்த வட்டம் , தற்போது தேய்ந்து போய்விட்டதை மறந்து விட்டீர்களா? உங்கள் இறந்து பொன உறவு ஒன்று முன்னொருநாள் சமைத்துதந்த உணவின் ருசி அழிந்து போய்விட்டதாக உணரவில்லையா?  புதிய
  உறவுகளை உருவாக்கி அதில் கிடைக்கும் அன்பில் திளைத்திருப்துதான் வாழ்க்கையா? புதிய ரசனைகளை உருவாக்கி இப்படியான விலங்கமான சிந்தனைகளை தவிர்த்திருபப்துதான் வாழக்கையா?  முன்னர்
  நான் மரணத்தையிட்டு சந்தோசமாக ருந்தேன்.. ஏனெனில் சமயநம்பிக்கையில் மரணத்தின் பின் இந்த உலக வாழக்கையின் சூட்சுமம் உனக்கு விளங்கப்படுத்தபடும் என தெரிவித்திருந்தார்கள்.. ஆனால் படித்த விஞ்ஞானமோ மரணம் ஒரு தெளிந்த மீளா நித்திரை என இலக்கணப்படுத்திவிட்டது.. ஆகவே இறக்க முன்போ பின்போ உனக்கு எதுவுமே எப்போதுமே தெரியப்போவதில்லை என தெரிந்தவாறு எப்படி வாழ்கிறீர்கள்?  நான்
  ஒருவரிடம் இதைப்பற்றி அளவளாவிய இடத்தில் ஒரு அளவுக்கு மீறி சிந்திக்காமல் விட்டால் வாழ்க்கை இனிக்கும் என்றார்.. உண்மைதான் கஷ்டப்பட்டு குழந்தைக்காக உழைக்கும் கூலித்தொழிலாளியிடம் இதைக்கேட்ட போது அவனுக்கு கேள்வியே விளங்கவில்லை.. ஆனால் எனக்கோ ஏன் இந்த விலங்கமான விடைதெரியாத உலகத்தில் ஒர் குழந்தையை படைத்துவிட்டு அதற்கும் இப்படி தன் 25 வயதில் தலையை உடைக்க விடவேண்டுமென்ற கேள்வியே எழுகிறது…  25 க்கு பின்னரான வாழ்க்கையை ரசிப்பது எப்படி? நீங்கள் உங்களுக்குள் வைத்திருக்கும் விடைகளை தாருங்களேன் ப்ளீஸ்…..! ( தியானம் குண்டலினி சக்தி என்று ஏதாவது சொன்னால் மண்டை உடையும் சொல்லிக்கிடக்கு ;) )
  பதில் கிடைக்கக்கூடிய சில பதிவுகள்

  மரணத்தை வெல்வது எப்படி?

  மரணம்: புல்லட், வந்தி, சேரன் மற்றும் பலர்


  62 Responses

  1. இந்தப் பதிவிற்க்கு பின்னூட்டம் இடுவது என்றால் அது ஒரு பதிவாக இட்டால் தான் உண்டு. முதல்பாதியில் குழந்தைகளின் அட்டகாசத்தை அழகாகவும் சுவையாகவும் விபரித்த நீங்கள் பின்பாதியில் வாழ்க்கையின் பல இடங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

   25 வயதைக் கடந்தவன் என்ற வகையில் சிலவற்றிற்க்குப் பதில் சொல்லமுடியும், ஆனால் மனதளவில் நான் இன்றைக்கும் 23 வயதில் இருப்பதால்( அடிக்கடி என் குடும்பத்தவர்களும் நண்பர்களும் சொல்வது நான் இன்னும் அடையவில்லை என்று)சிலவற்றிற்க்கு பதில் சொல்லமுடியாது காரணம் அனுபவம் இல்லை.

   எதற்க்கும் இன்னொரு தடவை அந்த போல்ட் எழுத்தில் உள்ளவற்றை மட்டும் வாசித்துவிட்டு வருகின்றேன். முதல்பாதியில் சிரிக்கவைத்துவிட்டீர்கள், வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

  2. புல்லட் குழந்தைகளை பிராக்காட்டுவது என்பது ஒரு தனிக்கலை, எனக்கு அதில் கொஞ்சம் அனுபவம் இருக்கு, சிறுவயதில் சித்திகளின் பிள்ளைகளுடன் விளையாடுவதும் அதில் ஆஹா குழந்தைகளை கவனிப்பதும் நான் தான். இத்தனைக்கும் சில குழந்தைகளை என்னுடன் விடமாட்டார்கள் காரணம் அவனோ/அவளோ பயங்கரக் குழப்படிகள் செய்தால் அடிச்சுப்போடுவன். நீங்கள் சொன்னதுபோல் அவர்களுக்கு என்ன செய்வது பிடிக்கும் என்பதை அறிந்திருந்தால் அதற்கேற்றவாறு அவர்களைச் சமாளிக்கலாம்.

   என்ரை அத்தையின் மகன் ஒருதன் இருக்கின்றான்(7 வயது) குழப்படியில் உலகமஹா நம்பர் ஒன் அவன் தான். ஆனால் அவன் வீட்டில் வந்தால் சுட்டி டிவி போட்டுவிட்டுவிடுவேன், சிங்கன் அதைவிட்டு அசையமாட்டார். வீட்டிலுள்ள சகல பொருட்களும் தப்பிவிடும். இன்னொருவன் இருக்கின்றான் விஜய் ரசிகன், அவனுக்கு சிடியில் ஒரு விஜய் படத்தைப்போட்டால் அதனைப் பார்த்தபடி இருப்பான். பொம்பிளைப் பிள்ளை ஒருவருக்கு அக்காவின் மேக்கப் செட்டை கொடுத்தால் சரி தன்னுடைய முகத்தையோ இல்லை என்னுடைய முகத்தையோ அலங்கோலாமாக்குவார் (மேக்கப் பொருட்கள் முடியப்போகின்றது என அக்கா கத்துவது தனிக்கதை).

   ஆகவே அவர் அவருக்கு என்ன பிடிக்கும் என முதலிலையே அறியவேண்டும். ஆனால் இது ஒரு கஸ்டமான காரியம் ஒரு நாளைக்கு விஜய் பிடிக்கும் என்பான் இன்னொரு நாள் ஐயாம் பேக் என அஜித் ஸ்டைலில் வருவான்.

   இவர்களை முதலில் நன்றாக படிச்சால் பிரச்சனை இல்லை அதற்க்கு தான் நேர்சரி டீச்சர்களை இவர்களை விளங்ககூடியவாறு நடக்க பயிற்சி கொடுக்கின்றார்கள்.

   ஆனாலும் அந்தக் குழந்தைகள் எம்முடன் பயங்கரமாக நடந்தாலும் கடைசியில் மாமாவோ, சித்தாவோ இல்லை வேறு ஏதூம் பெயரிலோ அழைக்கும் போது மனம் இளகிவிடும்.

  3. 25 வயதில் நீங்கள் ஒரு நல்ல வேலையில் இருந்து வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்தால் அடுத்தது கல்யாணம் செய்வதை பற்றி யோசிக்கலாம். இல்லெயெனில் ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பிரம்மச்சாரி வாழ்க்கையின் இறுதி காலத்தை சுகமாக அனுபவிக்கலாம். கல்யாணம் முடிந்தவுடன் வாழ்க்கை ஒரு புதிய வழியை தேடிக்கொண்டு போய்விடும். அதனால் ரொம்பவும் கவலைப்படாமல் அனுபவியுங்கள்.

   25வயதில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்காமல் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் எனில் இதுப்பொன்ற சிந்தனையே வராது.

  4. ஆஹா அப்பிடியோ வந்திய தேவரே! ம்ம் நல்ல விளக்கங்கள்...மேலும் பல கேள்விகளுக்கான விடைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.. காரணம் உங்கள் உறவினர் கூறுவது பொல இன்னும் இளமையாகவும் இனிமையாகவும் உள்ளீர்கள் ( ;) )ஆகவே உங்களுக்கு அந்த கேள்விகளுக்கான விடைகள் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்..

  5. //வெறுமை.. வெறுமை… வெறுமை… பயமாக இருக்கிறது…//

   ம்ம்ம் இதுவரை எனக்கு இந்த வெறுமை ஏற்படவில்லை ஆனால் தனிமையில் பல நாட்கள் நிறைய விடயங்கள் யோசித்திருக்கின்றேன். எனக்கு வெறுமை ஏற்பட்டது எப்போ என்றால், சிங்கப்பூர் போகும் போது ஒரு 4 மணித்தியாலம் விமான நிலையத்தில் காத்திருந்தது. அந்த 4 மணித்தியாலமும் பல விடயங்களை தனித்து வெளிநாடு போய் வாழ்வது,( நண்பர்கள் இருந்தாலும் பெற்றோர், உறவினரைப் பிரிவது கஸ்டமான காரியம்)வேலை செய்வது என பலவிடயங்கள் வந்துவந்துபோகின. விமான நிலையத்தில் நடப்பவையை இடைக்கிடை சுற்றிப்பார்த்தபடியாலும் சிங்கப்பூர் விமானத்தில் சில தேவதைகள் வந்ததால் அவர்களைப் பிராக்குப் பார்த்ததாலும் மனம் ஏனோ வெறுமையாகத் தான் இருந்தது.

   பின்னர் சிங்கையில் இருந்து ஜேபி போர்டரூடாக மலேசியாவிற்க்கு நாடு புதிசு, மக்கள் புதிசு, புரியாத மலே மொழி பலதரப்பட்ட மக்கள் என பேரூந்தில் தனிமையில் சென்றபோது ஏதோ உலகமே இருண்டதுபோல் தோன்றியது. ஆனாலும் இடைக்கிடை டயலொக் ரோமிங் மூலம்( காசை பிடிங்கித் தள்ளும்) மலேசியாவிலுள்ள நண்பனூடும் இலங்கையிலுள்ளவர்கலூடும் தொடர்பு வைத்திருந்தபடியால் கொஞ்சம் வெறுமையும் தனிமையும் குறைந்திருந்தது.

   ஆனால் எல்லாவற்றிலும் மிகப்பெரிய வெறுமை அல்லது கொடுமை என்பது வாழ்க்கையில் அடுத்து என்ன என நினைக்கும் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள். ஆனால் இவையெல்லாம் சில நிமிட எண்ணங்கள் மட்டுமே, மற்றும் படி வாழ்க்கை வழமையான ரூட்டில் எப்படியோ போய்க்கொண்டிருக்கும், புல்லட் சொன்னதுபோல் சைட் அடிப்புகள், வலையில் நண்பர்களை வாருதல், அவர்களால் வாராப்படுதல், படம், பாட்டு, ரேடியோ என வாழ்க்கை போகும்.

   பல விடயங்களைச் சீரியசாக எழுதவைத்துவிட்டீர்கள்,

   முக்கிய குறிப்பு : இந்தப்பின்னூட்டம் இட்டது நானா என சிலருக்கு சந்தேகம் வரலாம், காரணம் நான் இவ்வளவு சீரியசாக எழுதி யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.

  6. திருத்தம்
   ( அடிக்கடி என் குடும்பத்தவர்களும் நண்பர்களும் சொல்வது நான் இன்னும் matured அடையவில்லை என்று)

  7. மஞ்சூர் ராசா... உங்கள் கருத்துரைகளை மிகவும் பெறுமதியானதாக கருதுகிறேன்.. ஆனால் கலியாணம் முடிந்தது மிகவும் புதிய பாதை என்பதும் பிரம்ச்சரியம் 2 3வருடங்கள் சந்தோசமாக கழியுங்கள் என்பதும் பீதியயே தருகிறது.. இன்னும் வாழக்கை 2 , 3 வருடங்கள் மட்டும்தான் என்பது போல மிகவும் கவலைப்படுத்துகிறது.. :( பார்க்கலாம் ஏனையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று...

  8. //ஆனால் எல்லாவற்றிலும் மிகப்பெரிய வெறுமை அல்லது கொடுமை என்பது வாழ்க்கையில் அடுத்து என்ன என நினைக்கும் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள். ஆனால் இவையெல்லாம் சில நிமிட எண்ணங்கள் மட்டுமே, மற்றும் படி வாழ்க்கை வழமையான ரூட்டில் எப்படியோ போய்க்கொண்டிருக்கும்,//

   வந்தியரே...இதுதான் பிரச்சனை .. உங்களை ச்சூழ உறவகள் இருப்பதால் இந்த எண்ணங்கள் சில நிமிடங்களில் மட்டுப்படுத்தப்பட்டு விடுகிறன.. ஆனால் குடும்பங்களை பிரிந்து கல்விக்காகவும் காசுக்காகவும் தனியே இருப்பவர்களுக்கு இந்த யோசனை மணித்தியாலங்களாக நாட்களாக அமைவதால் இப்படியான சிந்தனைகள் அவர்களுக்கு தோன்றுகிறன்..

   ஆகுவே தீர்வு என்னவென்பதான பிரச்சனை.. அந்த தனிமையில் இரக்கும் போது வரும் கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டால் தனிய இரப்பதில் எந்த பிரச்சனையும் இல்லைதானே?

  9. //திருமணமாகி புதிய வட்டத்தை உருவாக்கியவர்கள் , நீங்கள் வளரந்தபோது உங்களை சுற்றியிருந்த வட்டம் , தற்போது தேய்ந்து போய்விட்டதை மறந்து விட்டீர்களா? //

   அனுபவம் இல்லை அதனால் என்னால் என்னுடைய எண்ணத்தைப் பதிலாகப் போடமுடியாது. ஆனால் கூட இருந்த நண்பர்களைப் பார்த்ததில் சிலர் திருமணத்தின் முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கின்றார்கள். புதிய உறவுகளாக மனைவியும் அவர்கள் உறவுகளும் கிடைத்திருக்கும் அதுமட்டும் தான் வித்தியாசம். சிலவேளை மனைவி உறவினராக இருந்தால் அதில் கூட எந்தவித வித்தியாசமும் தெரியாது.

   அதே நேரம் மனைவி வந்தபின்னர் தன் உறவுகளையும் நண்பர்களையும் மறந்த அல்லது மறக்கச் செய்யப்பட்ட கணவன்மார்கள் இருக்கின்றார்கள். இது மனைவியின் உறவுகளைப் பிரித்த கணவர்களுக்கும் பொருந்தும்.

  10. புல்லட் அண்ணாவா இது ???????????தனிமையில் இருக்கும் நேரத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் அண்ணா

  11. வந்தியரே உங்கள் பதில்கள் அருமையாக உள்ளன ! ஏன் ஒரு தனிப்பதிவாக அனைத்தையும் எழுதி லிங்கை பின்னூட்ட கூடாது..

   நான் வட்டம் அழிவது என கூறியது எமது பெற்றோர் மாமன் மாமி வயதாகுவதையும் அவர் களது சிறப்பு கரக்கடர்கள் ( உதாரணமாக நல்ல சுவையாக நண்டு கறி செய்வாரக்ள என் வைப்போம்) மங்கிப்போவதையும் கூறினேன்.. எமது முன்னேற்றத்தை ரசிக்கும் புலன்கள் மங்க ஆரம்பித்ிருக்கும் அவர்களுக்கு.. விளக்கம் ப்ளீஸ்...

  12. பனையூரான்
   புல்லட் அண்ணாவா இது ???????????தனிமையில் இருக்கும் நேரத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் அண்ணா //

   அடப்பாவி ஒரு ரெண்டு மூண்டு நாளாக சீரியஸ் மூடில இருக்கிறது பொறுக்காதா உங்களுக்கு? கடவுளே ... ஏண்டா நீங்கள்ளாம் இப்பிடி? சரி அடுத்த பதிவு சிரிப்பம்... ஓகே?

  13. புல்லட் நீங்களும் நம்ம இனம்தான் என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன்.
   அந்தக் குழந்தைகளுடனான அனுபவத்தை இவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

   //நான் அலறிய அலறலில் ஓடிய பக்கத்வீட்டு நாய் இன்னும் திரும்பி வரவில்லை..// நன்றாக சிரித்தேன்.

   அப்புறம் இரண்டாம் பாதியில் நீங்கள் சொல்லவரும் விசயம், எல்லோருமே இந்த வயதில் அனுபவித்திருப்பார்கள். கட்டாயம். நானும் இந்தவிதமான கேள்விகள் அவ்வப்போது வந்துபோக கண்டிருக்கிறேன். நீங்கள் அந்த வீட்டில் தனியாகவா இருக்கிறீர்கள்?
   //
   றிகுவார்மென்ட் அனாலிசிஸ்..
   ஒரு வழியாக ஒவ்வொன்றையும் சமாளிக்கும் விதத்தை கண்டுபிடித்துவிட்டேன்.. //

   இதுதாங்க ரசனையின் முதல்கட்டம். குழந்தைகளைக் கையாளத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லா சூழ்நிலைகளையும் தெளிவாகக் கையாள்வார்கள் என்பது என் நம்பிக்கை.

   // “ இஞ்ச வாங்கோ அப்பன்.. அப்பிடி செய்ய கூடாது .. பிள்ளைக்கு நோகுமல்லோ “.. என்று உருகி வழிவதை ரசித்த அவள் //

   இப்படி ஒரு பெண்ணைக் கவரும் வித்தை தெரிந்த நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்! நீங்கள் நகைச்சுவைகளை புல்லட் வேகத்தில் வீசுபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவெல்லாம் போதாதா!

  14. ஊர் சுற்றி ... பின்னூட்டத்துக்கு நன்றி...

   நீங்களும் உத்தகைய கேள்விகளை சந்தித்துள்ளீர்கள் என்று அறிய சந்தோசம்.. கடந்த மாதம் வரை இன் னொரு நண்பனுடன் அதே வீட்டில் இருந்தேன் .. நான் கிட்டார் வாசிக்க பழகதொடங்கியதும் அவன் சொல்லாமல் கொள்ளாமல் சிங்கப்பூருக்கு ஓடிவிட்டான்..அன்றிலிருந்து வறுக்கவும் ஆளில்லாத இரவுகள்..
   விளைவுதான் இந்த கேள்விகள்.. உடனடியாக யாரையும் ரூம்மேட்டாக பிடிக்கா விட்டால் விரைவில் டுமீல் சுவாமிகள் அல்லது புல்லட் மகரிசி பெண் பக்தை விவகாரத்தில கைது எண்டு ஏதாவது நியுஸ் பேப்பரில் படிக்கலாம் ..

   சரி உங்களுக்கு வந்த கேள்விகளுக்கு நீங்கள் சமாளித்துக்கொண்ட விடைகள் என்ன?

  15. நானும் இந்தமாதிரி கேள்விகளைக் கேட்டுக்கொண்டு சென்னைக்கு வந்த புதிதில் பலவிசயங்களைத் தேடி அலைந்தேன்.

   //25 க்கு பின்னரான வாழ்க்கையை ரசிப்பது எப்படி? நீங்கள் உங்களுக்குள் வைத்திருக்கும் விடைகளை தாருங்களேன் ப்ளீஸ்…..! ( தியானம் குண்டலினி சக்தி என்று ஏதாவது சொன்னால் மண்டை உடையும் சொல்லிக்கிடக்கு ;) ) //

   இதையெல்லாம் கூட முயற்சி செய்து பார்த்துவிட்டு, ஒண்ணும் போணியாகாததால் பாதியில் கைவிட்டுவிட்டேன். நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த கிட்டாரை முழுவீச்சில் கற்றுக்கொள்ளுங்கள். இசை எப்போதுமே மனதை அமைதியாக்கும்.

   அப்புறம் புல்லட், நான் அனுபவித்த பல உணர்வுகளை இந்த இடுகையில் அழகாக வடித்துள்ளீர்கள். மிகவும் ரசித்துப் படித்தேன் இந்த இடுகையை.

  16. இசை ... இனிமையான பதில் நண்பா...

   நான் அதில் முழுமனதோடு இறங்கபோகிறேன்.. பார்க்கலாம்.. நன்றி நன்றி..

  17. வெறுமை... தனிமை...
   பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கின்றேன். ஆனால், தலையணைகள் மட்டும் கண்ணீரால் நனைந்திருந்த இரவுகள் விடியும் போது கடமைகள் அவசரப்படுத்த - அவைகளே முக்கியமென போலி முகம் தரித்துக் கொண்டு நடையைக் கட்டியிருக்கின்றேன்.

   "எங்களைப் பற்றி யோசியாதே... நீ கவனமாகப் படிக்க வேணும்" என்கின்ற தொலைபேசி இறைஞ்சல்களுக்காகவேனும்....
   பின்னர், "எங்களைப் பற்றி யோசியாதே... நீ வெளிநாடு போக வேணும்... உனக்கும் சில பொறுப்புக்கள் இருக்குத்தானே" என்கிற அட்வைசுகளுக்காகவேனும்...

   அவைகளை முன்னிலைப்படுத்தி எங்கள் பலரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது.

  18. //சரி உங்களுக்கு வந்த கேள்விகளுக்கு நீங்கள் சமாளித்துக்கொண்ட விடைகள் என்ன?//

   அதற்கு உங்களுடைய வரிகளே விடைகள்! :)

   //சில கேள்விகள் என்னை கவலைப்படவே செய்கிறன… எனக்குத் தெரியும் அவை இன்னும் ஓரிரு நட்களில் மறைந்துவிடும்.. மறுபடியும் பழைய புல்லட்டாகி நண்பர்களுடன் நடுரோட்டில் நின்று ஜொள்ளு விட ஆரம்பித்து விடுவேன்.. ஆனால் இந்த பீலிங் ஒரு வித்தியாசமாக ஒரு வித அழகாக இருக்கிறது .. வரும் கேள்விகளும் சற்று புதிரானவையாகவே இரக்கிறன.. அவற்றை பதிந்து வைத்திரக்க விரும்பகிறேன்…//

   சற்று விரிவாக விளக்க வேண்டுமானால், நான் கடவுள் நம்பிக்கை, மரணத்திற்கு பின்னான வாழ்க்கை, ஆன்மா,தியானம் போன்ற பல விசயங்களை ஒன்றாகச் சேர்த்து சிந்தித்துக் கொண்டிருந்த காலம் அது. ஆனால், நான் இவ்விசயங்களையும் கேள்விகளையும் அரைத்துக்கொண்டிருந்தபோது, பல புத்தகங்களைப் படிக்க நேரிட்டது.

   அதன்பின்னர் இந்த ஆன்மா, கடவுள், போன்ற விசயங்களிலிருந்து வெளிவந்து 'மனிதமூளை என்பது ஒரு மென்பொருள் மாதிரி' என்ற சிந்தனை எனக்குள் வந்துவிட்டது. அதன்பின்னர் இதுபோன்ற கேள்விகள் என்னை எதுவும் செய்வதில்லை!

  19. ஆதிரையின் வரிகளே பல புலம் பெயரந்தவர்களினதும், உறவுகளை பிரிந்து வாழ்பவர்களினதும் ரணங்களை சுட்டி நிறகிறன.. போலி வேடம்தான் எம் வாழ்க்ககை என்றான பிறகு குத்தீட்டி போல கிழிக்கும் இந்த தனிமையின் கேள்விகளை என்ன செய்வது? பின்னூட்டத்துக்கு நன்றிகள் ஆதிரை

  20. ம்ம் மனித மூளை ஒரு மென்பொருள் போல .. ம்ம் இன்னொரு சுவாரசியமான கருத்து.. கிரகிக்க ட்ரை செய்துதான் பார்ப்போமே... :)

  21. //சின்ன வயதில் என் பாட்டி சொல்லித்தந்தது என்னில் ஆழவே வேரூன்றியிருந்தது.. //

   பாட்டி ரெம்ப too much!!!

   //“தம்பி வலு நல்ல குணமான அன்பான பெடியன் எண்டு சொன்னவை .. //

   உண்மையாவா?? :-O


   //முதல்நாள நான் உந்த பிசாசுகளிடமிருந்து தப்பிப்பதற்காக தூங்குவது போல் நடிக்கும்போது வானரம் ஒன்று சேப்டி பின்னால் நறுக்கென்று குத்திவிட்டிருந்தது.. நான் அலறிய அலறலில் ஓடிய பக்கத்வீட்டு நாய் இன்னும் திரும்பி வரவில்லை//

   சோகத்துக்கு பின்னர் வரும் சந்தோஷம் என்று இதை தானா சொல்லுவார்கள்? அப்பாடா... சிரிச்சு ஏலாது!

   //ஒருவாறாக திருமணமும் முடிந்துவிட்டது…//
   யாருக்கு உங்களுக்கா?:))

   OK இனி சீரியஸ்...

   புல்லட் எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்றோ தெரியவில்லை ஆனாலும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நல்ல பதிலை சொல்வார்கள் என்றே எண்ணுகின்றேன். உங்களது வெறுமை எப்படி இருக்கும் என என்னால் ஊகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்கள் அம்மாவின் அன்பு முகத்தை நினைத்துக் கொள்ளுங்கள் அவர்களுக்காக எல்லாம் நல்லா வரவேண்டும் என்று நினையுங்கள் எல்லா வெறுமையும் உங்களை விட்டு பயந்தோடிவிடும். ஆனாலும் இந்த 25 வயதுக்கு பின்னரும் கடவுள் உங்களுக்கென்று பெரிய பெரிய திட்டங்களை வைத்திருக்கலாம். மனம் சலிப்படையாமல் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்!

  22. நகைச்சுவையாக இருப்பவர்கள் பலரின் உள்பகுதி இப்படியாக இருப்பதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்.
   நான் இப்போது 20 வயதை கூட அடையாதபடியால் அறிவுரை எல்லாம் சொல்ல முடியாது.
   ஆனால் நானும் கிட்டத்தட்ட உங்களைப் போல். நண்பர்களுடன் மொக்கை எல்லாம் போடும் போது என்னைப் பார்ப்பவர்கள் நான் 100 விழுக்காடு சந்தோஷமாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் என் உண்மையான உணர்வுகள் எனக்கு மட்டும் தான் புரியும்.
   நான் சொல்ல வருவது என்னவென்றால் பொதுவாக எல்லோருமே இப்படித் தான் எல்லோருக்கும் இதே உணர்வுகள் இருக்கின்றன. நீஞ்கள் தனிமையில் இருப்பதால் கொஞ்சம் அதிகமாக உணர்கிறீர்கள் என நினைக்கிறேன்.
   பின்னூட்டங்கள் வர வர அனேமானோர் உங்களைப் போலவே இருக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்.

  23. யாழினி : பாட்டி சொன்னது அனுபவ ரீதியான உண்மை.. இடம்கொடுத்தால் கரச்சல்.. ஆனால் இரண்டும் அன்பு செலுத்துகையில் கல்லும் உருகிவிடும்..

   நான் நல்லபெடியன் எண்டு சொன்னால் அவன் நாக்கு அழுகிவிடும்... உதெல் லாம் உந்த நடுத்தர வயதுப்பெண்டுகள் விடலைப்பசங்களிடம் வேலை வாங்குவதற்காக பணன்படுத்தும் அங்குசங்கள்.. எமக்கு தெரிந்திருந்தும் மறுக்க முடிவதில்லை.. :(

   எனக்கு கலியாணம் கட்டும் ஐடியா இன்னும் வரவில்லை.. கட்டினவன் எல்லாம் இப்ப கிழிக்கிறதை பாக்க பயமாக்கிடக்கு..


   அம்மாவின் முகமும் வயதாகிகொண்டுபோவது என் முன்னாள் வட்டம் தேய்வதை சொல்லி பயமுறுத்துகிறது.. எனக்கு என் பத்து வயதிலிருந்த அம்மாதான் தற்போது மறுபடியும் வரவேண்டுமென்ன உளப்பாடுதான் காணப்படுகிறது.. என்னத்தை செய்ய? பார்க்கலாம்...

   இந்த தனழமையை துரத்தி விட்டால் எல்லாம் ஓகே யாகிவிடும்... :)

  24. கனகோபி: இதென்னடா புதுக்கதையா இருக்கு? எல்லாரும் அப்பிடியா? எனக்கு இதுவரை காலம் இப்படி ஒரு சிந்தனயே வந்ததில்லை.. ரூமில் தனிமையில் விடப்பட்டபோது வந்த ஒரு வெறுமையே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்..

   விரைவில் சரியாகி விடுமென்று தெரிந்தாலும் எனக்கு உந்த உணர்வுகளுக்கு ஒரு விடையை தெரிந்து கொள்வதில் ஒரு அலாதி ஆர்வம் காணப்படுகிறது என்பதே உண்மை.. பின்னூட்டத்துக்கு நன்றி..

  25. //விரைவில் சரியாகி விடுமென்று தெரிந்தாலும் எனக்கு உந்த உணர்வுகளுக்கு ஒரு விடையை தெரிந்து கொள்வதில் ஒரு அலாதி ஆர்வம் காணப்படுகிறது //

   அப்படி ஏதேனும் தெரிந்துகொண்டால், மறக்காமல் அதையும் ஒரு இடுகையாக பதிவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். :)

   இப்படி ஒரு அருமையான இடுகையை எழுதியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  26. வாசிக்கும் போது பல உணர்வுகள்.. வாசித்தபோது மேலும் பல கலங்கலான,கவலையான,கலவையான உணர்வுகள்..

   ஒரு தமிழ் கலைத்துவ படம் போல,முதல் பாதி ஜாலியான நகைச்சுவையாகவும் முடிவடையும்போது ஒரு வெறுமையான கவலையையும் தந்துவிட்டீர்கள்..

   ஒரு நல்ல நகைச்சுவையாளன் நல்லதொரு சிந்தனாவாதி என்பது மீண்டும் உங்கள் பதிவால் நிரூபிக்கப்படுகிறது.

   முதலில் வாழ்த்துக்கள் இந்தப் பதிவிற்கு,,

   நானும் ஒரு கட்டத்தில் இந்த சுய தேடல்,சுய வாசிப்பிற்கு என்னை உட்படுத்தி இருந்தேன்..

   நல்ல காலம் வீட்டில் இரு தம்பியர், உறவினர்களிலும் அயலிலும் சின்னக் குழந்தைகள் இருந்ததாலும் எனக்கு குழந்தைகள் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்புண்டு.

   அது இப்போது எனது மகனை வளர்ப்பதிலும் அவனோடு விளையாடுவதிலும் உதவுகின்றது.

   அடிக்கடி நீங்கள் முன்பு சொல்லும் என் குழப்படிகார மகனோடு நான் படும்பாடு புரிந்திருக்குமே???

   தூக்கம் குறைவான நேரங்களிலும் வேலைப்பளுவான நேரங்களிலும் சிலவேளை அவனோடு எரிந்து விழுந்து மீண்டும் அவன் வந்து கொஞ்சி விளையாடும்போது மனம் மிகக் கவலையடைந்தும் இருக்கிறேன்.

   நான் ஒருவனோடே இந்தப் பாடு படும்போது நீங்கள் பட்ட துன்பம் கொஞ்சம் ஓவர் தான்..

   அந்தப் பின் குத்தல் தான் வந்தியர் அடிக்கடி விளம்பரப்படுத்தி வந்த பின் நவீனத்துவமோ?

  27. நீங்கள் குறிப்பிட்ட வாழ்க்கையின் படிப்படியான பக்கங்கள் சிந்திக்க சிந்திக்க கவலை தருபவை..
   நேற்றிருந்தவர் இன்று இல்லை.. இன்றிருப்பவர் நாளை?

   நான் முன்பெல்லாம் கொஞ்சக் காலம் யார் யார் இறப்பார் இருப்பார் என்று நினைத்து தவித்து அழுதும் இருக்கிறேன்.

   நான் திருமணம் முடித்தது இருபத்தொன்பது வயதில்.. நீங்கள் சொன்னது போல் அல்லாமல் என் வட்டம் திருமணத்தின் பின்னர் சுருங்காமல் மேலும் விரிந்துள்ளது. என் மனைவி மகனோடு, இன்னமும் என் பெற்றோர் சகோதரர், மனைவியின் குடும்பம் என்று சந்தோசமாகவே விரிந்துள்ளது.

   இந்த சமச்செர் தன்மை எல்லோருக்கும் வராது.. ஆனால் அது தான் வாழ்க்கை..

   நான் ஒருவரிடம் இதைப்பற்றி அளவளாவிய இடத்தில் ஒரு அளவுக்கு மீறி சிந்திக்காமல் விட்டால் வாழ்க்கை இனிக்கும் என்றார்..//

   மிக சரி. அளவோடு சிந்தித்தால் வாழ்க்கை ஆனந்தமே..

   என்னோடு தனியாக பேசும்போது எனக்குத் தெரிந்த அனுபவங்களைப் பகிர்கிறேன்.

   உண்மையில் உங்கள் உணர்வுகளால் ஒரு நல்ல சகோதரன் கிடைத்தது போல் உணர்கிறேன்.

   பி. கு= பின்னூட்டம் நீண்டதற்கு மன்னிக்க.
   உங்கள் உணர்வுகள் உண்மையாக அவசரமாக வந்து விழுந்திருக்கின்றன என்பது உங்கள் பதிவில் காணப்படும் ஏராளமான எழுத்துப் பிழைகளால் விளங்குகிறது. அதையும் கொஞ்சம் கவனித்து திருத்துக.

  28. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
   தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
   www.ulavu.com
   (ஓட்டுபட்டை வசதிஉடன் )
   உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

   இவண்
   உலவு.காம்

  29. நன்றி ஊர்சுற்றி..

  30. லோசண்ணா! பின்னவீனத்துவம் என்று வந்தி அட் குடுத்தது இதற்கல்ல.. இந்த கருவை நான் கடந்தவாரம் ஒரு முழு நீள காமெடி பதிவாக போடுவதாகவே இருந்தேன் .. ஆனால் நிலமைவேறுமாதிரியாகிவிட்டது.. பின்னவீனத்துவ பதிவு அதற்குரிய இலக்கணங்களுடனே எழுவதாகத்தான் உள்ளேன்..

   உங்கள் கருத்துகளுக்கு கோடானுகோடி நன்றி.. இப்படியான உணர்வலைகளில் பலர் சிக்கி மீண்டிருப்பது நம்பிக்கையை தருகிறது.. ஒரு சகோதரன் போல உங்கள் தனிப்பட்ட கருத்துகளை தர முன்வந்தமைக்கும் மென்மேலும் நன்றிகள்..

   மிக அளவோடு சிந்திப்பதும் உப்படியான எண்ணங்களை தவிர்ப்பதும் சிறந்த உபாயம் .. ஆனால் என்னை நானே ஏமாற்றுவது போல் ஒரு உணர்வு ... ம்ம் பார்க்கலாம்..

   இந்த பெரிய பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா!

  31. என் மனதளவில் எனக்கு இன்னும் 25 வயது முடியவில்லையாதலால் எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லை.

   அன்புடன்,
   டோண்டு ராகவன்

  32. புல்லட்........

   நீண்ட நாட்களுக்கு பின்னர் காத்திரமான, பலரையும் சிந்திக்க வைத்த பதிவை இட்டிருக்கிறீர்கள். உறவுகளுக்கிடையிலான பகிர்தலும், பிரிதலும் ஏற்படுத்துகின்ற வலிகளை அழகாக சொல்லியிறுக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

   எனக்கு இன்னும் 25 வயது ஆவதற்கு பல வருடங்கள் உள்ளன... ஆனாலும், தங்களின் இந்த விடயம் குறித்து நானும் அதிகமாக சிந்தித்துள்ளேன்.

   ////முன்னர் நான் மரணத்தையிட்டு சந்தோசமாக ருந்தேன்.. ஏனெனில் சமயநம்பிக்கையில் மரணத்தின் பின் இந்த உலக வாழக்கையின் சூட்சுமம் உனக்கு விளங்கப்படுத்தபடும் என தெரிவித்திருந்தார்கள்.. ஆனால் படித்த விஞ்ஞானமோ மரணம் ஒரு தெளிந்த மீளா நித்திரை என இலக்கணப்படுத்திவிட்டது.. ஆகவே இறக்க முன்போ பின்போ உனக்கு எதுவுமே எப்போதுமே தெரியப்போவதில்லை என தெரிந்தவாறு எப்படி வாழ்கிறீர்கள்?////

   ‘மரணம்’ என்ற விடயமே இல்லாது விடில் வாழ்க்கை குறித்து ஒரு எதிர்பார்ப்பே இல்லாமல்... சலிப்பு ஏற்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். “ஆடு.... நல்ல ஆடு..... உன் கணக்கு எவ்வளவென்று... எனக்கு தெரியும்” என்று மனிதனின் கணக்கை எழுதியவன் எத்தனை தடவை சிரித்திருப்பான்.

   அதுதாங்க தாங்கள் ஏதாவது ‘சொப்வேயர் புறோக்கிறாம்’ எழுதுகிறீர்கள். அதுமாதிரியே சில வேளைகளில் எங்களையும் மேலுள்ள சக்தி ‘புறோக்கிறாமாகவே’ எழுதியிருப்பதாக சில வேளைகளில் எனக்கு படுவது உண்மை. இந்த விடயத்தை என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனும் அடிக்கடி கூறுவான். உலகத்தில் நடக்கிற யுத்தங்களையும், அழிவுகளையும் ‘கணனி வைரஸ்’ தாக்கத்துடன் ஒப்பிட்டும் பதிலளிப்பான். அனேக தருணங்களில் அது சரியாகவே இருப்பதாக உணர்கிறேன்.

  33. //நான் அலறிய அலறலில் ஓடிய பக்கத்துவீட்டு நாய் இன்னும் திரும்பி வரவில்லை..//

   அருமையோ அருமை!

   //புதிய உறவுகளை உருவாக்கி அதில் கிடைக்கும் அன்பில் திளைத்திருப்துதான் வாழ்க்கையா? //
   எந்த ஒரு உறவுமே நிலையற்றது. நீங்கள் எப்படிபுதிய உறவுகளை உண்டாக்கினாலுமே ஒருகாலத்தில் அவை அற்றுப்போகும் போது மனசு கிடந்து வலிக்கும்.அதனால் எந்த உறவுகளுடனும் ஒரு அளவுக்குமேல் மனசை பந்தப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் சந்தோசமாக இருக்கலாம்.

   எனக்கு இன்னும் 24தான் ஆவதால் உங்கள் கடைசிக் கேள்விக்கு பதில் அளிக்கமுடியாது.
   [அப்பாடி ஒருமாதிரி சமாளிச்சாச்சு.]

  34. புல்லட்டின், மரணம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு என்னால் முடிந்த பதில்.
   http://enularalkal.blogspot.com/2009/09/blog-post_07.html

  35. Safety pin ஆல குத்தினது மற்றும் பல இடங்களில் நகைச்சுவைகளை ரசித்தேன்.

   அம்மாக்களுக்கு வயசாவது பற்றிப் பின்னோட்டம் இடுவம் என்று நினைத்தால் அதை நீங்களும் பின்னோட்டத்தில் கூறியிருக்கிறீர்கள். அக்காவை எங்கட வயசில் இருந்தபோது அம்மா இளமையா இருந்தவா. இப்ப அம்மாக்கு வயசாகிட்டுது ..எங்களுக்கு அம்மாவோட கூடக் கதைக்கோணும் பழகோணும் என்று நினைக்கிறபோது அம்மா அக்காக்களின் பிள்ளைகளோடு நேரம் செலவழிக்கப் போய்விடுவதாலும் வயசு போவதால் அம்மாவால் அக்காக்களுக்குச் செய்தது போல் எல்லாம் எங்களுக்குப் பார்த்துச் பார்த்துச் செய்ய முடியாமல் இருப்பது எதையோ குறிப்பாக உணர்த்துவது போலிருக்கிறது என்று நானும் என் தோழியும் போன வருடம் பேசிக்கொண்டது ஞாபகம் வந்தது.

   அத்தோடு இன்று என் தோழியின் தந்தை இறந்த செய்தி வந்தது. இன்னும் அழைத்துப் பேசவில்லை. என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. மரணங்கள் பற்றிய பயம் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

   முடிந்தால் தனிமை மரணம் பற்றி ஒரு பதிவு போடுவன்.

  36. புல்லட் தனிமை கொடுமையில்லை, தனிமையில் இருந்தால் ஏனப்பா வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். அல்பேர்ட் ஐன்ஸ்டீன் இப்படி வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்திருந்தால் நமக்கு புவியீர்ப்பு விசை பற்றிய விளக்கம் கிடைத்திருக்காது. ஆகவே தனிமையில் இருந்தால் நல்ல இசை, பாடல்கள் கேளுங்கள், இல்லை உங்கள் வருங்காலத்து மனைவி பற்றி கற்பனையில் சுவுஸிலையோ இல்லை கனடாவிலையோ டூயட் பாடுங்கள். இதெல்லாம் தனிமையை மறக்கச் செய்யும் மருந்துகள்.

  37. ரொம்பவே அருமையான பதிவு புல்லட், கிட்ட தட்ட உங்கள் கவலையை கவிதை போல வர்ணித்திருக்கிறீர்கள். நானும் உங்களை போலவே தனித்து வேலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் ஒரு அறைக்குள்ளே அடைந்து கிடப்பவன் தான். எனக்கு இணையமும் தொலைபேசியும் தான் தோழர்கள்.

   என்னை பொருத்த வரையில் வேலையிடத்திலும் தங்குமிடத்திலும் நண்பர்கள் இருந்தாலும் அவர்கள் நெருங்கிய, மனக்கவலைகளை கொட்டக்கூடிய நண்பர்களாக இல்லை. அந்த நண்பர்கள் வேலை மற்றும் வேறு தேவைகளுக்காக வந்த இடத்தில் நண்பர்களாக இருப்பவர்கள்.

   வார இறுதியில் தான் நான் வீட்டுக்கு போவேன், அதுவும் என்னுடைய வீட்டுக்கல்ல என் தாய் மாமனின் வீட்டுக்கு (நான் சின்ன வயது தொடக்கம் வளர்ந்த இடம்) அங்கு போய் என் அத்தையின் மடியில் படுத்து தூங்கி அவங்க திட்டி அந்த திட்டை வாங்கி கொண்டே அவங்க ஊட்டிவிடும் உணவை உண்ணும் சுகம் என்னை போல தனிமையில் இருப்பவர்களே உணர்வார்கள்.

  38. எனக்கு மாதத்திற்கு ஒரு முறை அம்மா அப்பாவை பார்க்க போகையில் உள்ள பரவசம் எத்தனை கோடி கொடுத்தாலும் வராது. உங்களது பதிவு என் மனதை என்னவோ பண்ணுது.. ரொம்ப கஷ்டமா இருக்கு

  39. "யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

   ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
   அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

   உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

   விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

  40. புல்லட்,

   முதல் பாதியில் வயிறு குலுங்க சிரிக்கைவைத்துவிட்டு, பிற்பாதியில் சிந்திக்கவைத்துவிட்டீர்களே. சிறப்பாக சொல்லப்போனால, கவலைப்படவைத்துவிட்டீர்கள்.

   அதுகளைப்பற்றியெல்லாம், சிந்திக்கக்கூடாது. வாழ்க்கை என்றால் அப்படித்தான் என்று, சாதாரணமாக எடுத்துவிட்டு போய்க்கொண்டிருக்கவேண்டியது தான்..

   உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் சந்தோஷமாக வாழமுடியாது.

   அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.

  41. முதலில்.. நல்ல அழகான பதிவு.. நன்றாக இரசித்தேன்..
   அடுத்து எனக்கு இன்னமும் 25 வயது வரவில்லையாதலால்.. நான் நீங்கள் கேட்தும் கேள்விகளுக்குப் பதிலுரைக்க முடியாதுள்ளது.. நாம யுத் தானே... அப்புறம் எதுக்கு இப்ப வெறுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.. நல்லா ஜாலியா வாழ்க்கையை என்ஜோய் பண்ணேக்க எதுக்கு மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவான்...

  42. ஹ்ம்.... இதுகளைப்பற்றியெல்லாம் கனக்க யொசிக்க வேணாம் ஏனெண்டால் பிறகு நீங்களும் புத்தனாகிவிடுவீர்கள். உண்மை அதுதான் - நாம் வாழ்கின்ற சூழலிலேயெ வரைமுறைப்பட்டு அல்லது ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து பழகிவிட்டால் அதிலிருந்து திடீரென மாற்றம் ஏற்படும் போது மனம் அந்த மாற்றத்தின் தாக்கத்தால் சஞ்சலப்படும் - அது பற்றி சிந்திக்கச் சிந்திக்க எல்லையற்ற எம் கற்பனைத் திறன் சில ஆழமான இலகுவில் புரியச் சிரமமான கருப்பொருட்களை எமக்கு விளங்கப்படுத்துவதை உணரலாம். அரசமாளிகையிலேயே வாழ்ந்த கௌதமன் திடீரென ஒருநாள் ஊரைச் சுற்றி வருகையில் கண்ட அவலங்கள் தான் அவனைப் புத்தனாக்கியது ஆனால் அது அவன் கௌதமன் என்ற படியால் பலரை இது போன்ற சிந்தனைகள் பித்தனாகத் தான் ஆக்கியிருக்கிறது.

   வாழ்க்கை குறுகிறது - கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் இரசியுங்கள் - வாழுங்கள்! வாழ்ககை வாழ்வதற்கே அதிகம் யோசிப்பதற்கல்ல....

  43. dondu(#11168674346665545885)
   என் மனதளவில் எனக்கு இன்னும் 25 வயது முடியவில்லையாதலால் எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லை.

   ஓ மச்சூர் ஆகாதா கேசா... சொறி டோண்டு.. நீங்கள் குணம்பெற கடவுள பிரார்த்திக்கிறேன் ... :-(

  44. மருதமூரான்.
   புல்லட்........

   நீண்ட நாட்களுக்கு பின்னர் காத்திரமான, பலரையும் சிந்திக்க வைத்த பதிவை இட்டிருக்கிறீர்கள். //

   ஓ ! ஒரு கிழமை gap கூட உங்களுக்கு நீண்ட நாளாக தென்படுகிறதா? உங்கள் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது..

   // எனக்கு இன்னும் 25 வயது ஆவதற்கு பல வருடங்கள் உள்ளன... ஆனாலும், தங்களின் இந்த விடயம் குறித்து நானும் அதிகமாக சிந்தித்துள்ளேன். //

   கணக்கு எந்த வாத்தி? 25- 30 = -5 .. இதற்கு மட்டெடுத்து இன்னும் 5 வருசம் இருக்குதெண்டு சந்தோசமாக இருக்கிறியளா?

   //‘மரணம்’ என்ற விடயமே இல்லாது விடில் வாழ்க்கை குறித்து ஒரு எதிர்பார்ப்பே இல்லாமல்... சலிப்பு ஏற்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். “ஆடு.... நல்ல ஆடு..... உன் கணக்கு எவ்வளவென்று... எனக்கு தெரியும்” என்று மனிதனின் கணக்கை எழுதியவன் எத்தனை தடவை சிரித்திருப்பான்.

   எங்களையும் மேலுள்ள சக்தி ‘புறோக்கிறாமாகவே’ எழுதியிருப்பதாக சில வேளைகளில் எனக்கு படுவது உண்மை. இந்த விடயத்தை என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனும் அடிக்கடி கூறுவான். உலகத்தில் நடக்கிற யுத்தங்களையும், அழிவுகளையும் ‘கணனி வைரஸ்’ தாக்கத்துடன் ஒப்பிட்டும் பதிலளிப்பான். அனேக தருணங்களில் அது சரியாகவே இருப்பதாக உணர்கிறேன்.//
   அருமையான கருத்து ஒன்று

   பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா! ;)

  45. ஆதித்தன்

   எந்த ஒரு உறவுமே நிலையற்றது. நீங்கள் எப்படிபுதிய உறவுகளை உண்டாக்கினாலுமே ஒருகாலத்தில் அவை அற்றுப்போகும் போது மனசு கிடந்து வலிக்கும்.அதனால் எந்த உறவுகளுடனும் ஒரு அளவுக்குமேல் மனசை பந்தப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் சந்தோசமாக இருக்கலாம். //

   இது உண்மையா? குழந்தைகளுடனும் உங்கள் அன்பை அளவுக்கு மீறி செலுத்தாமல் இருக்கவேண்டுமா? அன்பை அள்ளி வழங்குவதில் ஒரு சுகமுண்டு.. அதுதான் வாழக்கையின் இனிப்பான அம்சங்களில் ஒன்றாக அமையும் என்று நினைத்திருந்தேன்..


   //எனக்கு இன்னும் 24தான் ஆவதால் உங்கள் கடைசிக் கேள்விக்கு பதில் அளிக்கமுடியாது.
   [அப்பாடி ஒருமாதிரி சமாளிச்சாச்சு.]//

   அது சரி.. 25 ஆக இன்னும் 15 வருசம் இருக்குதானே.. டொன்ட் வொறி பி ஹப்பி..

   சமாளிக்கிறாய்ங்க்களாம்..

  46. சினேகிதி
   அம்மாக்களுக்கு வயசாவது பற்றிப் பின்னோட்டம் இடுவம் என்று நினைத்தால் அதை நீங்களும் பின்னோட்டத்தில் கூறியிருக்கிறீர்கள். //

   உங்களுக்குமா? ம்ம் கவலைகளை பகிர்ந்து கொள்வதில் சற்று ஆறுதல்தானே.. உங்கள் அக்காக்களை நினைத்து திருப்பதி பட்டுபக்கோள்ளுங்கள்.. :-(


   முடிந்தால் தனிமை மரணம் பற்றி ஒரு பதிவு போடுவன். //

   கட்டாயம் ஆர்வத்துடன் எதிர் பார்த்து இருக்கிறேன்.. வரைந்தபின் குழுமத்தில் ஒரு குறிப்பிடவும்..

  47. வந்தியத்தேவன்
   புல்லட் தனிமை கொடுமையில்லை, தனிமையில் இருந்தால் ஏனப்பா வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். அல்பேர்ட் ஐன்ஸ்டீன் இப்படி வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்திருந்தால் நமக்கு புவியீர்ப்பு விசை பற்றிய விளக்கம் கிடைத்திருக்காது. ஆகவே தனிமையில் இருந்தால் நல்ல இசை, பாடல்கள் கேளுங்கள், இல்லை உங்கள் வருங்காலத்து மனைவி பற்றி கற்பனையில் சுவுஸிலையோ இல்லை கனடாவிலையோ டூயட் பாடுங்கள். இதெல்லாம் தனிமையை மறக்கச் செய்யும் மருந்துகள். //


   நல்ல கருத்துகள்தான் நடைமுறைப்படுத்திப் பார்ப்போம்.. நன்றி அண்ணா! :)

  48. யோ வாய்ஸ் (யோகா) உங்களது பதிவு என் மனதை என்னவோ பண்ணுது.. ரொம்ப கஷ்டமா இருக்கு //
   நீங்களும் நம்ம கஷ்ட கட்சியா? என்னத்தை செய்யுறது யோகா? கவலைகளை பகிர்ந்து ஆறுதலடைவதைத்தவிர வேறுவழி?

  49. புல்லட்,

   அதுகளைப்பற்றியெல்லாம், சிந்திக்கக்கூடாது. வாழ்க்கை என்றால் அப்படித்தான் என்று, சாதாரணமாக எடுத்துவிட்டு போய்க்கொண்டிருக்கவேண்டியது தான்..

   உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் சந்தோஷமாக வாழமுடியாது.
   //
   அதுவும் உண்மைபோலதான் கிடக்கு.. உணர்வுகள்தான் வாழக்கை என்ற என் அடிப்படை பிழைபோலும்.. உங்கள் கருத்து குறித்து கட்டாயம் சிந்திக்கிறேன்..

   பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா!

  50. சுபானு
   அடுத்து எனக்கு இன்னமும் 25 வயது வரவில்லையாதலால்.. நான் நீங்கள் கேட்தும் கேள்விகளுக்குப் பதிலுரைக்க முடியாதுள்ளது.. நாம யுத் தானே... அப்புறம் எதுக்கு இப்ப வெறுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.. நல்லா ஜாலியா வாழ்க்கையை என்ஜோய் பண்ணேக்க எதுக்கு மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவான்...

   // 300வருடத்துக்கப்புறம் முடியப்போற பெற்றோலியத்தை பற்றி கவலைப்படுகிறியள்.. ஆனா 30 வருசத்தில முடியப்ுபோற வாழ்க்க ையைப்பறிற சிந்திக்க கசக்குது.. நான் என்னத்தை செய்ய? தம்பி இன்னும் 25 ஐ அடைய பல யுகங்கள் இருக்கில்லயா ? டோன்ட் வொறி .. பி ஹாப்பி :-D

  51. என்.கே.அஷோக்பரன்
   வாழ்க்கை குறுகிறது - கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் இரசியுங்கள் - வாழுங்கள்! வாழ்ககை வாழ்வதற்கே அதிகம் யோசிப்பதற்கல்ல.... //

   உண்மைதான் அசோக்.. நான் இப்பிடி இன்னும் கொஞ்ச நேரம் யோசித்தால் பித்தனாகிவிடுவேன்..

   கடைசி பஞ்ச் அருமை.. பின்னூட்டத்துக்கு நன்றி..

  52. நானும் அதிகமாக தனிமையை உணர்ந்தவன். உங்கள் இடுகையைப் பார்த்ததும் என் எண்ணங்கள் அலை மோதிவிட்டன. நாம் தனிமையில் இருக்கும் போது தனிமை பற்றியோ மரணம் பற்றியோ சிந்தித்தோமாக இருந்தால் மரண பயம் அதிகரித்து. இன்னும் தனிமைப் படுத்தப்படுவதாகவே உணர்வோம். அளவுக்கு அதிகமாக சிந்திப்பதை (எல்லை மீறிய சிந்தனைகளை) தவிர்ப்பதே நல்லது.


   எனக்கு கவலைகள் வரும்போதோ அல்லது தனிமையை உணரும்போதோ சிறுவர்களோடு சிறிது நேரம் பொழுதைக் களித்தால். சந்தோசமாக இருக்கும்.

  53. இத்தனை சீரியஸ் பதிவிலும் ஒரு சின்ன கடி..

   வந்தி அட்வைஸ் பண்ணுறேன் என்று இந்தப் பச்சிளம் பாலகனை கவுத்துடாதேங்கோ..

   அந்த புவி ஈர்ப்பு விசை பற்றிய சிந்தனைக்காரர் ஐசாக் நியூட்டன்.. :)

   //இல்லை உங்கள் வருங்காலத்து மனைவி பற்றி கற்பனையில் சுவுஸிலையோ இல்லை கனடாவிலையோ டூயட் பாடுங்கள். இதெல்லாம் தனிமையை மறக்கச் செய்யும் மருந்துகள்//

   இது வேறயா? பாவம் புல்லட்.. ;)
   வந்தி சொல்லி புல்லட் கேட்கவேண்டிக் கிடக்கு

  54. //அந்த புவி ஈர்ப்பு விசை பற்றிய சிந்தனைக்காரர் ஐசாக் நியூட்டன்.. :)//

   அட ஓம் நான் மறந்தேபோனேன் காலையில் நிறைய வேலைகள் இதில் ட்விட்டரில், ஜீமெயிலில், மரணம் பதிவிற்க்கு வந்த பின்னூட்டம் என பல வேளைகளை ஒரே நேரத்தில் செய்ததில் நியூட்டன் ஐன்ஸ்டீன் ஆக மாறிவிட்டார்,

   //இது வேறயா? பாவம் புல்லட்.. ;)
   வந்தி சொல்லி புல்லட் கேட்கவேண்டிக் கிடக்கு//

   நான் சொன்ன அட்வைஸில் தான் புல்லட் மனம் குளிர்ந்து இருக்கின்றார்.

  55. உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

  56. போண்டியாருக்கு கலியாண ஆசை வந்துட்டுதுப்பா.... யாராவது அவரின் அம்மாட்ட சொல்லுங்கோவன்.. பாவம் பொடியன்...

  57. புல்லட்,
   மனிதன் ஒரு சமூக விலங்கு. சமூகம் சார்ந்த செயற்பாடுகளே மனிதனை இயங்குநிலைக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.

   தனிமையின் கொடுமையினை நான் மிக மிகச் சிறிதாகவே உணர்ந்திருக்கிறேன். ஏனெனில் எனக்கு நண்பர்கள் அதிகம்.

   25 வயதுக்குப் பின்னரான என்றில்லாது, எமது அனைத்து நிலைகளிலும் தனிமை கொடுமையானது. நண்பர்கள் என்றும் கைகொடுப்பார்கள்.

   இரவு நேரங்களில் தனிமையில் உணர்வுபூர்வமான விடயங்களைச் சிந்திப்பது மனதைக் குழப்பும். தேவையில்லாத முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைக்கும் தள்ளும். குழம்பும் வேளைகளில் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுங்கள்.

   வேறென்ன கண்ணாலம் கட்டினாபிறகு பேசாம தனியவே இருந்திருக்கலாம்... எண்டிருக்கும்.. :))

  58. அனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்.
   வலைப்பதிவுகளில் நானும் பதிவு இட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. அதற்காகவே வலைப்பதிவில் கணக்கினை ஆரம்பித்து சில வருடங்கள் உருண்டோடிவிட்டன....... இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது........

   அத்துடன் தமிழில் தட்டச்சு செய்வது இதுவே முதல் தடவை. எனவே ஏதாவது பிழைகள் காணப்பட்டால் பின்னுட்டல் பெருமக்கள் பொறுத்து அருள வேண்டும்.
   மற்றும் உங்கள் வழிகாட்டல்களும் வரவேற்கப்படுகின்றன......


   www.daarbaar.blogspot.com

  59. This comment has been removed by the author.
  60. 25 வயதாகாவிட்டாலும் கிடைத்த தனிமைகளை அதிகம் சிந்திக்க இடமளித்திருக்கிறேன்... அண்ணா நீங்கள் கூறியது போலவே வெறுமையை உணர்ந்திருக்கிறேன்...

   அவற்றின் தாக்கம் அன்றாட அலுவல்களில் நான்கே நாடகளில் அழிந்த போக கண்டிருக்கிறேன்... மேலே கூறியது போல் உணர்வுகளுக்கு இடம் கொடாமல் "வாழ்க்கை வாழ்வதற்கே" என்று வட்டம் போட்டு வாழ்ந்தால் சந்தோசமாக இருக்கலாம் தான்.. ஆனால் அந்த சந்தோசம் உண்மையானதா..? இல்லை நம்மை நாமே சந்தோசமாக இருப்பதாய் ஏமாற்றி கொள்கிறோமா..! என்பவை கூட இன்னும் கேள்விகளாயே இருக்கின்றன...

   நம்முடன் இருந்த வட்டம் (அம்மாவிலிருந்து அனைவரும்..) தேய்ந்து போக (வயதாக..) நமக்குள்ளும் வெறுமை... சிறு வயதில் கண்ட superman கனவுகள், சமூக இலட்சியங்கள் தொடக்கம் கடைப்பிடக்க வேண்டும் என்று நினைத்த கொள்கைகள் வரை யதார்த்தமில்லை என்ற matured போர்வை விழ இதயத்தின் ஓரமாய் இன்னும் வெறுமை...

   புல்லட் அண்ணா, எல்லோரும் போல் மனைவி, மக்கள், சமூகம் என்று வாழுறதா இருந்தால் தனிமையை தவிர்த்து அதிகம் சிந்திக்காமல் இருப்பது உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது... ;) கனக்க யோசிச்சா பிரச்சனைதானே.. கனக்க யோசிச்ச ஐன்ஸ்டினும் சாகேக்க கனக்க யோசிச்சு அணுகுண்டு கண்டுபிடிச்சதுக்கு கவலைபட்டுக் கொண்டு தானே போனவர்... எல்லோரும் போல நம்மல நாம எதுவும் தெரியா என்று ஏமாத்திக்கு கொண்டு வாழவேண்டியதுதான்...

  61. 'தென்கச்சி' அவர்களின் மரண செய்தியைக் கேட்டதும், இந்த இடுகையில் நீங்கள் விவரித்த அனுபவத்தை நான் மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன். ஏனென்று புரியவில்லை. ஏதோ ஒரு இனம்புரியாத நெருடல். வார்த்தைகளில் வர்ணிக்க இயலவில்லை நண்பா.

  62. இப்படி​யொரு நல்ல பதி​வை அ​டையாளம் காட்டிய சந்ருவுக்கு நன்றி! எப்படி இவ்வளவு நாள் படிக்காமல் ​போ​னேன் என்றிருக்கிறது. முதலில் பா​லோ ​செய்கி​றேன். இப்பதிவு முழு​மையும் படித்துவிட்டு வந்து முழங்குகி​றேன். அன்பும் வாழ்த்துக்களும்..!