இன்ட்ரஸ்டிங்காய் கொஞ்சம் எலக்ரோனிக்ஸ் - GSM செல்போன்




    மாணிக்கத்தாரின் சைக்கிள் கடையில் சஷ்டியை நொக்கி சரவணபவனார் போய்க்கொண்டிருந்தது. வழமை போல வாசலில் வெட்டிக்கும்பலும் பாடசாலைக்குப்போகும் வழியில் சைக்கிள் காத்துப்போன மாணவர்களுமாய் கடை களைகட்டினாலும் எல்லாருடைய கண்களும் யாரையோ அமைதியாக தேடிக்கொண்டிருந்தன..

    அந்த அமைதியைக்கலைக்குமாறு மாணிக்கத்தார் செருமிக்கொண்டு ஆரம்பித்தார்.. “எங்க இந்த தம்பனை காணேல்ல? காலம தான் வச்ச பருப்புக்கறிய மறந்து போய் தானே சாப்பிட்டிட்டானோ தெரியேல்லயே?“ .. என்று முடிக்கமுன் சைக்கிள் பம்மின் குழாயை வால்கட்டையுடன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு பொடியன் கத்தினான்.. “தம்பருக்கு நுர்று வயசுதான் .. அந்தா வாறர் பயங்கர குசியா ஆடிப்பாடிக்கொண்டு”

    வந்த தம்பரின் வாயில் சீக்காய் அடி.. நடையில் ஒரு டாம்பீக தள்ளாட்டம்.. கண்ணில் ஒரு மிதப்பு.. வந்து வாங்கில் இருந்தபோது ஒரு செருக்கு தெரிந்தது.. அதுக்கு பிறகுதான் அவர் கையிலிருந்த அந்த விசயம் தெரிந்தது..

    தம்பரின் கையில் ஒரு நொக்கியா N சீரிஸ் போன் பளபளத்தது.. சுற்றியிருந்த பையன்களுக்கெல்லாம் அதைக்காட்டி அதன் எல்லாத்தையும் சொல்லி புளுகிக்கொண்டிருந்தார்.. தனக்கு வெளிநாட்டில் இருந்து மனைவி தருவித்து தந்ததாகவும் இன்று மட்டும்தான் வெளியில் எடுத்து வந்ததாயும் கூறி பரபரப்பூட்டினார்..


    இதே வேளை இங்கு நிலவரம் தெரியாமல் ஆப்பைத்தேடி ஒருவர் ஆரவாரமாக வந்து
    கொண்டிருந்தார்.. அவர்தான் கனகண்ணை..


    வாங்கோ கனகண்ணை .. எப்பிடி சுகம்..” என்ற மாணிக்கத்தாரின் விசாரணையை பொருட்படுத்தாது தம்பருக்கு எதிராக குந்தியவர் தன்னுடைய பொக்கெட்டில் இருந்து ஒரு போனை எடுத்து யாருக்கோ
    கோல்
    பண்ணத்தொடங்கினார்..

    அது ஒரு சாயம் பொன 3310. அதில்வேறு பட்டனில் பாதியை காணவில்லை.



    “யாரு 119 ஆ? யோவ்! யாரோ நாசமறுவார் ராவோட ராவா சிவாஜிலிங்கத்திண்ட பொஸ்டர என்ட வீட்டு சுவரில ஒட்டிட்டாங்கள்.. காலங்காத்தால அதைப்பாத்த முன்வீட்டுக்கிழவி , ஒருக்கா கழுதை மாதிரி கத்திட்டு கபால மோட்சம் போய்ட்டுதாம்.. அதுக்கு குறுக்கால போவார் என்ட வீட்டு கண்ணாடிய உடைக்கிறாங்கள்.. நீங்கள்தான் வந்து நியாயம் தரோணும்.. ஆ? அப்பிடியே? உங்களுக்கு தமிழ் தெரியாதே? சட் அப் யு ஸ்டுப்பிட் இடியட் நான்சென்ஸ் “ என்று கான்சல் பட்டனை காட்டமாக அழுத்திவிட்டு
    நிமிரந்தார்..

    அங்கே எல்லாரும் ஆரவமாகவும் பயத்துடனும் அவரைப்பாரத்துக்கொண்டிருக்க தம்பர் மட்டும் கொடுப்பில் ஒரு நக்கல் சிரிப்புடன் தன் போனை சேட் தலைப்பால் துடைத்துவிட்டு பொக்ட்டினுள் வைத்தார்.. அதை கண்டும் காணாதது போல கனகர் தேர்தல் பற்றி கதைக்க ஆரம்பித்தாலும் தம்பர் தன் குசும்பு வேலைகளை காட்டி அவரை கடுப்பேற்றலானார்..

    "அண்ணே உங்கட போன் என்ன ஒரு காக்கிலோ வருமோ? சேட்டுப்பொக்கெட்டு சேத்தில முட்டுது? "

    "அண்ணே காலமைக்கு பாணுக்கு என்ன பட்டின் கறியோ? பாதியைக்காணேல்ல?"

    "அண்ணே உந்த மோகன் ஸ்டூடியாவில கமெரா ஒண்டை வாங்கி சேத்து கட்டினால் உங்கடயம் கமரn போன்தானே? என்னண்ணே நான் சொல்லுறது?"

    "அண்ணே .. இந்த ரொபிப்பேப்பர சுத்திக்கட்டினால் உங்கடயம் கலர்போன்தான்.. ரொபியை சூப்பிட்டுதாறன்..
    இரங்கோ"

    கனகரின் பல்லு நறுமுவது சைக்கிள் பொள்ஸ் உருளுவதைப்போல கேட்டது.. ஆனால் தம்பர் குசியேறி தம்பரின் போனுக்கு றிங் பண்ணினார்.. பழைய நோக்கியா றிங் டோன் நாரசாரமாக ஒலித்தது..

    "டடடாய்ங்டாய்ங் டடடாய்ங்டாய்ங்"

    "ஹாஹா அண்ணே .. உந்த அம்மன் கோயில் மணியை கழட்டிப்போட்டு உதைக்கட்டலாம்.. நல்லூர் வரையும்
    கேக்கும்.".


    கனகரின் கோபம் அந்தப்பக்கமாக வந்த மாட்டின் மீது திரும்பியது.. சைக்கிள் கரியரில் இருந்த பலாப்பழத்தை நாக்கல் தடவிப்பாத்த அந்த மாடு வாய் வைக்கப்போகும் போது சர் என்று பறந்து போய் மாட்டின் விலாவில் மடேர் என் அடித்து பின் பல பல்டிகள் அடித்து சேற்று நிலத்தில் விழுந்த அந்த நோக்கியா 3310 சற்றும் அசராமல் தொடரந்தது.

    "டடடாய்ங்டாய்ங் டடடாய்ங்டாய்ங்"

    அதிர்ச்சியடைந்த மாடு "கன்ட்ரி புறூட்ஸ்" என்று கத்தியவாறு ஓடி மறைந்தது.. போனை சென்று எடுத்து வந்து கிறீஸ் துணியில் துடைத்துவிட்டு மறுபடியும் உள்ளே வைத்த கனகர் "என்ன தம்பர் ஏதோ மணியைப்பற்றி கதைத்திர்" என்றார்.
    தம்பர் ஒரு விலங்கப்பார்வை பார்த்தபடி முறைத்தார்..

    “இஞ்சாருங்கோ கனகண்ணை! உந்த டைனோசர் காலத்து கறுமத்தை எறிஞ்சு போட்டு இப்பிடி புதுசா ஏதாவது வாங்குங்களன.... உதால நீங்க செய்யுறத போல பத்து மடங்கு செய்யலாம் இதுல..”
    தம்பர் சொல்லி முடிப்பதற்குள் மாடு நம்பர் 2 பலாப்பழ மணத்தில் எங்கிருந்தோ வந்து , கரியரை காமப்பார்வை
    பாரக்கத்தொடங்கியது.. உடனடியாக கனகர் தன்னுடைய பொக்கெட்டினுள் கையை விட, ஆனால் அவரை முந்திக்கொண்ட தம்பரின் கை தன்னிச்சையாக செயல்பட்டுவிட , வில்லு படத்தில விஜய் பறந்தது போல Nokia N சீரீஸ் ஸ்லோமோசனில் மாட்டை நோக்கி பறக்கலாயிற்று..

    *************************************************************************


    கேவிக்கேவி அழுது கொண்டிருந்த தம்பரின் கண்ணீரை புனல் வைத்து சேர்த்துக்கொண்டிருந்தார் மாணிக்கத்தார்.. யாரோ சில மாணவர்கள் அவரை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தனர்.. ஒரு டீப்பாய் போடப்பட்டு அதிலே ஒரு வெள்ளைத்துணியில் கிடத்தப்பட்டிருந்தது தம்பரின் போனின் பூதவுடல்.. சின்னாபின்னமாகிக்கிடந்த போனின் பகுதிகளை கஷ்டப்பட்டு தேடிப்பொறுக்கி ஒருங்கு சேர்த்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாதல் விழித்துக்கொண்டிருந்தனர் சில மாணவர்கள்.. ஆனால் கனகரோ, ஆர்வமாக, ஒரு குச்சியால் பாகங்களை விலக்கி பரிசோதனை பண்ணிக்கொண்டிருந்தார்.. நடுவில் ஒரு முறை அழுகையை நிறுத்தி இதையெல்லாம் நோட்டம் விட்ட தம்பர் மறுபடியும் “அவ்வ்வ்வ்” என்று வடிவேலு போல அழலானார்.

    “அய்யோ! மனுசி இண்டைக்கு உதை மறந்து போய் விட்டுட்டு போட்டுது ஓபிசுக்கு , சும்மா உங்களுக்கு காட்டுவம் எண்டு கொண்டு வந்தா இப்ப நான் வீட்ட போகேலாது போல கிடக்கு..இந்த எலெக்சனோட இந்தியாவுக்கும் பாதை திறந்தாங்கள் எண்டால் உந்த மாட்டிலயே ஏறி மளமளவெண்டு போடுவன்..
    அய்யோ கொல்லப்போறாளே.. ஙீஈஈஈஈ” என ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார் தம்பர்.

    இதனால் பரிதாபப்பட்ட கனகர் சொன்னார் “இஞ்சார் கவலைப்படாதை .. உந்தா உவர் தவத்தாற்ற பெடியள் ரெண்டும் வருது .. மூத்தவன்; முந்தி டயலொக்கில வேலை செய்தவன்.. ஏதாவது கேட்டுப்பாக்கலாம்“ என்ற படி ஆனந்த் சகோக்களின் மோட்டர் பைக்கை மறித்தார்..
    பெடிகளுக்கு நிலமை விளங்கப்படுத்தப்பட்டது..

    தம்பரை நமுட்டுச்சிரிப்புடன் பார்த்த மூத்தவன் ஆனந்த்; “எல்லாப்பாட்சும் இருந்தா சிலவேளை யோசிக்கலாம்.. பொறுங்க பாப்பம் “ என்ற படி ஒவ்வொரு பார்ட்டாக ஆராயலானான்..
    அவன் சேக்கிட் போட்டை எடுத்து உருட்டிப்புரட்டிப்பார்ப்பதை கண்ட கனகத்தார் “தம்பி உது எப்படி தம்பி வேலை செய்யுது எண்டு எனக்கு ஒரே ஆச்சரியமா கிடக்கு.. யாரோ எங்கயோ இருந்து கதைக்கிறத வயரே இல்லாமல் எப்பிடி கேக்கமுடியுது? அதோட நாம கதைக்கிறதும் எப்பிடி மற்ற ஆளுக்கு கேக்குது?.. கொஞ்சம் சொல்லுங்களன் தம்பி”

    ஏதோ கேட்க வந்த தம்பரின் வாய் ஒரு காட்டமான "உஷ்" மூலம் அடக்கப்பட்டது.. "அண்ணே இதில பாருங்கோ ! இது RF யுனிட்.. அதாவது இந்த வயர் லெஸ் வேலையை கவனிக்கற ஆள்.. உங்களுக்கு ரேடியோ எப்பிடி வேலை செய்யுதெண்டு தெரியும்தானே? அதே போலத்தான் இங்கயும் நீங்கள் 20Hz-20000Hz இல கதைக்கிறத வேறொரு RF பிரிக்குவென்சிக்கு மாத்தி அதை ட்ரான்மிட் செய்யுறது.."

    அதைக்கேட்ட கனகரின் கண்கள் ஆசச்சரியத்தில் விரிந்தது "தம்பி உந்த மொடுலேசன் தானே? முந்தி உந்த கோபாலசிங்கத்தாற்ற பெடியள் வந்து சொன்னவங்கள்.. ரேடியோவில FM அதாவது பிரீக்குவென்சி மொடுலேசன் பற்றி சொன்னவங்கள்.."

    "ஓமண்ண.. அங்க FM மாதிரி இங்க GMSK எண்டொரு மொடுலேசன்.. அதப்பற்றி கனக்க கதைச்சால் குழம்பிப்போடுவியள்.. அந்த மொடுலேசன் மூலமா 20Hz-20000Hz இல நீங்கள் கதைக்கிற சத்தம் 890 – 915 MHz உள்ள மின்காந்த அதிர்வுகளா மாற்றப்பட்டு ட்ரான்மிட் செய்யப்படுது.. அதே போல உங்களுக்கு வாற சத்தம் 935-960 MHz அதிர்வுள்ள அலைகளா றிசீவ் செய்யப்பட்டு உள்ள DSP எண்ட ஒரு யுனிட்டால 20-20000Hz க்கு , அதாவது மனுச காது கேக்கிற மாதிரி மாதுப்படுகுது.. இந்த RF யுனிட்டில ஒரு RF அன்டெனாவும் RF றிசீவரும் RF அம்பிளிபையர், பவர் யுனிட்டும் இருக்கும்.. இந்த RF றிசீவர் வாற சிக்னல் வெட்டுப்படாம கொத்ப்படாம வருதா எண்டு பாத்து வாறத ஒழுங்கா அடுக்கி பின்னால DSPக்கு கொடுக்கும்.."

    "அடடே.. அற்புதம் தம்பி.. ஆனால் தம்பி.. இங்க ஊருப்பட்ட ஆக்கள் உதாரணமா டயலோக், மொபிட்டல், இப்ப ஹச்சும் கனெக்சன் குடுக்கிறாங்கள் அவங்கள் எல்லாரும் உந்த பிரிக்குவென்சில ஒரேயடியா தங்கட கஸ்டமரிண்ட கோல்களை அனுப்பினால் பிரச்சனை வராதோ? முந்தி உந்த ரேடியோ கதையில சிக்னல் கொஞ்ஜெசன் ஜாமிங் எண்டு ஏதேதோ கதைச்சவன் அந்தப் பெடி.."

    "அண்ணே நல்ல கேள்வி.. ஒவ்வொருத்தருக்கும் 890-915 MHz இல நடுவில ஏதாவது சில 200KHz பகுதிகள் தேவைக்கேற்ற மாதிரி வழங்கப்படும்.. அப்படி 200KHz பகுதிகள் 125 நடுவில இருக்கு.. அதில தேவைக்கேற்ற மாதிரி செவிஸ் புரொவைடர்கள் வாங்கிக்கொள்ளுவினம்..உதாரணமா டயலொக்குக்கு 890-890.2MHz பகுதி வழிங்கப்பட்டிருக்கலாம்.."

    "அடடே.. அதாவது பிரிச்சு பிசிச்சு வழங்குற படியால் ரேடியோ மாதிரியே இங்கயும் கொஞ்ஜெசன் தவிர்க்கப்படுகுது அப்பிடித்தானே? அருமை அருமை.. ஆனால் தம்பி , இப்ப டயலோக்கிலயே ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் உதே பரீக்குவென்சில கதைச்சா என்னம்பி செய்யுறது? அது குழப்பாதோ?"


    "அண்ணே நீங்களும் வரவர நல்ல ஸ்மாட்டான கேள்வியள்தான் கேக்குறியள்.. இப்ப பாத்தீங்களெண்ணடால் உந்த கோப்பாய் டவர் இருக்குதான ? அந்த டவறுக்கு கீழ ஒரு அறை இருக்கும் ..


    அதை
    பேஸ் ஸ்டேசன் எண்டு சொல்லுறது.. அந்த ஸ்டேசனுக்கு ஒரு குறித்த எண்ணிக்கையான 200KHz பிரிக்குவென்சியள் ஒதுக்கப்பட்டிருக்கும்.. அதில உள்ள அந்த அநைய பாத்திங்களெண்டால் நிறைய எலெக்ரோனிக் உபகரணங்கள் ஒரு அலுமாரி மாதிரி ஒரு இடத்த சிவப்பு பச்சையா ப்ளிங் பண்ணிக்கிட்டிருக்கும்.. அந்த உபகரணங்களில் ஒன்று TRE/TRU என்று சொல்லுவாங்க . அந்த றக்கில அந்த உபகரணம் ரெண்டோ மூண்டோ இருக்கும்.. அது செய்யுற வேலை அற்புதமானது.. அந்த 200KHz ஐ பல யுசர்களுக்கு பகிர்ந்து விட்டுடும். எப்பிடியெண்டு கேட்டீங்களெண்டால், முதல் கொஞச நேரம் தம்பருக்கும் பிறகு அடுத்த கொஞச நேரம் கனகருக்கு பிறகு அடுத்த கொஞ்ச நேரம் எனக்கு பிறகு மறுபடியும் தம்பருக்கு எண்டு மள மளவெண்டு ஆக்களிண்ட காதில வித்தியாசம் கேகாத அளவுக்கு விரைவா மாத்தி மாத்தி குடுத்திட்டிருக்கும் . அதை டைம் டிவிசன் மல்டிபிள் அக்செஸ் எண்டு அழைப்பாங்க.. "


    "அம்மாடி.. எனக்கு பாதி விளங்கேல்ல ஆனாலும் ஏதோ மளமளவெண்டு மாத்தி மாத்தி குடுத்து ஒரே நேரத்தில ஒராள் மட்டும் கதைக்கிற மாதிரி ஏதோ செட்டப்பு எண்டும் விளங்குது.. "

    "அதேதான் அண்ணே.. சுப்பர்.."

    "அப்படியெண்டால் தம்பி இது என்ன" என்று கையிலிருந்த குச்சியால் போனை கிளறவும் தம்பருககு சூடாகிவிட்டது.. “இஞ்சாருங்கோ இஞ்ச போனை திருத்தி தரச்சொன்ன கிண்டி விளாடுறியள்.. ஐயோ ஐயோ.. என்ட நிலையை யாரும் புரிய மாட்டெங்கிறாங்களே.. நாசமறுவாள் வந்து மாட்டோடயல்லோ சேத்து கட்டிப்போடப்போறாள்.. சாணி நாறுமே.. நான் என்ன செய்வேன்..” என்று அலறவே கனகர் கண்கள் சிவக்க “ சுக் “ என்றார் அதட்டும் குரலில..

    ஆனந்தும்
    புன்னகைத்துவிட்டு சொன்னான் "அண்ணே இது ப்ரொசசர்.. இது டிஎஸ்பி இது ஏரூடி கொடெக்..இது....."

    "அய்யோ என்ட போனை போஸ்மோட்டம் பண்றாய்ஙகளே" என்று அலறியவாறு கண்ணீர் ஒழுக அமர்ந்தார் தம்பர்.

    தம்பி உங்களுக்கு லேட்டாப்போச்சு .. கொஞ்சம் கெதியென விளக்கங்கள் சொல்லேலுமோ இதுகளெல்லாம் என்னவெண்டு?


    ஆனந்த் ஒவ்வொரு பகுதியாக காட்டி விளக்கமளிக்கலானான்..

    "அண்ணே இது ஏரூடி கொடெக் அதாவது நீங்கள் கதைக்கிறது உண்மையா அனலொக் சிக்னல் அதை ட்ரான்மிசன் பேபோசுக்காக டிஜிட்டலா மாற்றும் உபகரணம்.. பிறகொரு நாள் அனலொக் டிஜிட்டல் வித்தியாசம் சொல்லுறன்.. மற்றது டிஎஸ்பி அதாவது டிஜிட்டல் சிக்னல் ப்ரொசெசர்.. உந்த மொடுலேசன் வேலையை கவனிக்குறது உவர்.. பிறகு இருக்கிறது ப்ரொசசர்.. இவர்தான் இந்த செல்போனெண்ட இருதயம்.. அவருக்கு பக்கத்தில இருக்கிற மெமரியில நீங்கள் சேவ் பண்ணி வச்சிருக்கிற தகவல்கள எடுக்கிறது.. பிறகு நீங்கள் உங்கட பட்டனை அமத்திறபோது அதை செயற்படுத்திறது அதை விட எல்லாத்துக்கும் ஒரு கோலை உருவாக்கும் பொது அதற்கான சிறப்பு வெலைகளை செய்யுறது டிஸ்பிளேக்கு தகவல் குடுக்கிறது எண்டு இவற்ற விளையாட்டுக்கள் எக்கச்சக்கம்..

    தம்பி கேக்கிறனெண்டு குறை நெக்காதயும் .. இந்த கோலை உருவாக்கிறதுக்கு என்ன கஸ்டப்படுது ப்ரொசசர்? கொஞ்சம் விரைவா சொல்ல முடியுமா?

    தொடரும்..


    பிகு: ஒரேயடியாக எழுதி முடித்துவிடுவமெண்டுதான் கடைசி ரெண்டு மணித்தியாலமா ட்ரை பண்ணிப்பாத்தன்.. முடியல.. இப்ப நான் போகவேணும்.. புதுவருசம் கழிச்சுதான் உங்கள மறுபடியும் சந்திக்க முடியும்.. ஆகவே அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. நல்லா ஜொலியா எஞ்சோய் பண்ணுங்க நண்பர்காள்.. வர்ட்ட்டா? பைபை! :-)

    10 Responses

    1. கலக்கல் அண்ணா

      ஆனாலும் கனகரின்ட போனுக்கு கடி கொஞ்சம் ஓவர்தான். அந்தாள் போனில டிவிட் எல்லாம் பண்ணுது, நீங்கள் 3310 எண்டுறியள் அதை?

    2. வழக்கம் போல கனகண்ணையை போட்டுத்தாக்கிட்டீங்க..ஹீஹீ
      கனகண்ண தன்ட மொபைல்ல போஃட்டோ எல்லாம் எடுக்க முடியும் எண்டு சொல்லிக் கவலைப்படுறார்...

      காமெடியா எலக்ரோனிக்சையும் சொன்னது கலக்கல்..:)

    3. நல்லாருக்கு...

      உங்களுக்கும் கிறிஸ்மஸ், புதுவருட வாழ்த்துகள்...!

    4. நல்லாயிருக்கு.

    5. உங்களுக்கேயான பாணியில நல்ல எலக்ரோனிக்ஸ் பதிவு ....

    6. கதையை கொஞ்சம் சுருக்கி மேட்டரை சொல்லி இருக்கலாம் தலைவரே.. நல்ல சுவாரசியம்..

    7. nallayirukku pasthivu, theriyadha pala vidayangalai therindhu konden...

      thodarndhu idhe matrhiri eludhungal bullet

    8. ஹி...ஹி..ஹி..ஹி.. சூப்பர்.. சரி சரி கொஞ்ச நாளைக்கு உங்க லொள்ளு இல்லாமல் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்ளிறம் சீக்கிரமாய் வந்திடுங்க.. புதுவருடத்திலையும் நிறைய புளுகணும்...

    9. அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

    10. அனைத்து சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையா? :P

      உங்கள் பாணியில் அருமையான பதிவு அண்ணா...

      (அரியாலைக்காரர் என்பதை 'தம்பர்' என்று பாவித்து உறுதிப்படுத்திவிட்டீர்கள்....)